இம்பால், மணிப்பூரில் கலவரம் நடந்த பகுதிகளில் பதற்றம் நீடிப்பதால், நிலைமையை ஆய்வு செய்ய, ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே நேற்று அங்கு சென்றார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பாஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பெரும்பான்மையாக வசிக்கும் மெய்டி சமூகத்தினருக்கு, பட்டியலின பழங்குடியினர் அந்தஸ்து அளிப்பதை எதிர்த்து, கூகி உள்ளிட்ட பழங்குடியினர் அமைப்புகள் 3ம் தேதி பேரணி நடத்தின.
இதில், இரு தரப்பிற்கும் ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.
மாநிலம் முழுதும் கலவரம் பரவியதில் 70 பேர் உயிரிழந்தனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்தன. இதையடுத்து மணிப்பூரின் பல பகுதிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். 10 நாட்களுக்கு மேல் பதற்றம் காணப்பட்ட நிலையில் கலவரம் கட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், பிஷ்ணுபூர் மாவட்டம் மொய்ராங்கில் உள்ள சில கிராமங்களில், ஆயுதமேந்திய இளைஞர்கள் சமீபத்தில் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, இங்கு மீண்டும் கலவரம் வெடித்து பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், கலவரம் நடந்த பகுதிகளை ஆய்வு செய்ய, நம் ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே நேற்று மணிப்பூர் சென்றார். இம்பால் நகர் சென்றுள்ள தலைமை தளபதி, அம்மாநில கவர்னர் அனுசுயா உய்கி, முதல்வர் பைரேன் சிங் ஆகியோருடன் கலவரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை கலவர பகுதிகளை பார்வையிட மணிப்பூர் செல்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement