அரிசி கொம்பன் யானையின் நடமாட்டம் காரணமாக கம்பம் நகராட்சிப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கேரளாவை ஒட்டிய தமிழக பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த அந்த யானை தேனி மாவட்டம் கம்பம் நகரப் பகுதிக்குள் நுழைந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
யானையும் குறுகலான சாலைகளிலும், தெருக்களிலும் அங்குமிங்கும் ஓடியது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ ஒன்றை யானை நசுக்கித் தள்ளியது.
யானை ஊருக்குள் வந்தால் மின்சாரம் தாக்காமல் இருக்க, அது செல்லும் வழியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. யானை வருவது தெரிந்தும் கூட நடு வழியில் நின்ற ஒருவரை யானை இடித்துத் தள்ளியது. நகருக்குள் சுற்றித் திரிந்துவிட்டு வெளியேறி வாழைத்தோப்பு ஒன்றுக்குள் அரிசிக்கொம்பன் ஓய்வெடுத்து வருகிறது. அரிசிக்கொம்பனை காட்டுக்குள் திருப்பி அனுப்ப கும்கி யானைகளை வரவழைக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். கேரளாவில் 10 பேரை அடித்துக் கொன்றுள்ள அரிசிகொம்பனின் நடமாட்டத்தால் கம்பம் பகுதி மக்கள் அவசிய தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.