Tamil News Live Today: செங்கோல்: ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம்: ரஜினிகாந்த்

செங்கோல்: ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம்

ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘’ இந்திய நாட்டின் புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் ஜொலிக்கப் போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் – செங்கோல்.

#தமிழன்டா

தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரதப்பிரதமர் @narendramodi அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி’’ என்று கூறியுள்ளார்

“திருடர்களுக்குச் சொல்லிவிட்டுத்தான் பிடிக்கப்போவீர்களா?” – இபிஎஸ்

அதிமுக-வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “வருமான வரித்துறை அதிகாரிகள்மீது திமுக-வினர் தாக்குதல் நடத்தியிருப்பது, தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுக்கு ஓர் உதாரணம். `சோதனை நடப்பதாக முன்கூட்டியே தகவல் கொடுக்கவில்லை’ என்கிறார் கரூர் எஸ்.பி. திருடர்களைப் பிடிக்கப்போகும்போது, இப்படித்தான் முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு அவரின் காவல்துறை செயல்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நகருக்குள் அரிசி கொம்பன் யானை… 144 தடை உத்தரவு!

கம்பம் நகருக்குள் அரிசி கொம்பன் யானை புகுந்திருப்பதால் அந்தப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது மாவட்ட நிர்வாகம்!

“மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது!”- நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி

வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக-வின் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, “கரூரில் இரு வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் செந்தில் பாலாஜி விசுவாசிகள் இரு தரப்பினரின் மீதும் வழக்கு தொடுத்திருப்பதாகச் சொல்லப்படுவது வியப்பையளிக்கிறது. மேலும், முன்னரே தகவல் சொல்லாமல் சென்றால் இப்படித்தான் நடக்கும் என திமுக-வின் செய்தித் தொடர்பாளர் திரு. டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியிருப்பது கேலிக்கூத்து.

சோதனைக்குச் செல்லும் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கே, வாகனங்களில் ஏறும்போதுதான் எங்கு சோதனையிடப்போகிறார்கள் என்று தெரியும். அப்படியிருக்கையில் காவல்துறைக்கு எங்கு சோதனை நடக்கப்போகிறது என்ற தகவலை முன்னரே சொல்ல வேண்டும் என பொது அறிவுள்ளவர்கள் கேட்க மாட்டார்கள்.

மேலும், வருமான வரித்துறையினர் எங்கு வேண்டுமானாலும் அறிவிப்பு இல்லாமல் சோதனையிடுவதற்கு அதிகாரம் இருக்கிறது என்பதைச் சட்டம் தெரிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள். அரசு அதிகாரிகளைப் பணிசெய்ய விடாமல் தடுத்தால் அதற்கான விளைவுகளுக்குத் தொடர்புடையவர்கள் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை இந்த விவகாரத்தில் யாரும் கைதுசெய்யப்படாதது தமிழக அரசின், காவல்துறையின் பொறுப்பற்ற தன்மையை, மெத்தனப் போக்கை, தி.மு.க-வுக்கு ஆதரவான நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகிறது.

மத்திய அரசின் ஊழியர்களைத் தாக்குவது, கொலை மிரட்டல் விடுப்பது, பணிசெய்ய விடாமல் தடுப்பது போன்ற குற்றங்களை தமிழக அரசு வேடிக்கை பார்த்தாலும், மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது என்பதைத் தொடர்புள்ளவர்கள் உணர வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

“தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்கும் மோடிக்கு நன்றி”- ஓபிஎஸ்

ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழா சீரோடும் சிறப்போடும் நடைபெற எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், நீண்ட நாள்களுக்குப் பிறகு ஒரு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை உருவாக்கி, தமிழ்நாட்டுகும், தமிழக மக்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில், அதில் செங்கோலை இடம்பெறச் செய்த பிரதமர் மோடிக்கு என்னுடைய பாராட்டையும் நன்றியையும் அஇஅதிமுக சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்” எனப் பதிவிட்டிருக்கிறார்.

இலங்கைக்குக் கடத்துவதற்காகக் கொண்டு செல்லப்பட்ட ஒரு டன் பீடி இலைகளை மண்டபம் காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர்!

தனியார் பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது!

திருச்சி – சேலம் சாலையில் வாத்தலை அருகிலுள்ள கிளியநல்லூர் பகுதியில் தனியார் பேருந்து நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாகப் பேருந்தில் பயணம் செய்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். பேருந்தில் பயணம் செய்த பயணிகளை அந்தப் பகுதி பொதுமக்களும் போலீஸாரும் மீட்டுவருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று எட்டாவது நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நடைபெறவிருக்கிறது. இந்தியாவில் ஏற்கெனவே அமலில் இருந்த திட்ட கமிஷனுக்கு மாற்றாக, 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததும் உருவாக்கப்பட்டதுதான், `நிதி ஆயோக்’ என்னும் அமைப்பு. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் பணிகள் உள்ளிட்ட சில முக்கியப் பணிகளை இந்த நிதி ஆயோக் செய்துவருகிறது. நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் மோடி இருக்கிறார். இந்த அமைப்பின் ஆட்சி மன்றக்குழுவில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநர்கள் இடம்பெற்றுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் இந்த அமைப்பின் ஆட்சி மன்றக் கூட்டம் நடைபெற்றுவருகிறது. கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி கடைசியாகக் கூட்டம் நடைபெற்ற நிலையில், தற்போது இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறவிருக்கிறது.

நிதி ஆயோக்

நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், ஆளுநர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை வைக்கவிருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கப்போவதில்லை எனத் தெரியவந்திருக்கிறது. நாட்டில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் எனத் தெரிகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.