Ban on Indian ships carrying Russian oil | ரஷ்ய எண்ணெய் எடுத்து வரும் இந்திய கப்பல்களுக்கு தடை

லண்டன்,-சர்வதேச தடையை மீறி, ரஷ்யாவில் இருந்து எண்ணெய் எடுத்து வரும் இந்திய கப்பல் நிறுவனத்தின், 21 கப்பல்களுக்கான பயன்பாட்டு சான்றிதழை வரும் 3ம் தேதி முதல் திரும்பப் பெற பிரிட்டன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

‘நேட்டோ’ எனப்படும் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்பில் சேர எதிர்ப்பு தெரிவித்து, ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.

ஓராண்டுக்கு மேலாக இந்த சண்டை நீடிக்கும் நிலையில், ரஷ்யாவின் இந்த செயலுக்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதையடுத்து, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது.

இந்நிலையில், இதை எடுத்து வரும் மும்பையைச் சேர்ந்த கப்பல் நிறுவனத்திற்கான சான்றிதழை வரும் 3ம் தேதி முதல் திரும்பப் பெறப்போவதாக, இந்த சான்றிதழை வழங்கும் நிறுவனம் அறிவித்து உள்ளது.

ரஷ்ய எண்ணெயை எடுத்து வரும் இந்திய கப்பல் நிறுவனமான ‘கேட்டிக் ஷிப் மேனேஜ்மென்ட்’ 40க்கும் மேற்பட்ட டேங்கர் கப்பல்களை பயன்படுத்தி எண்ணெய் எடுத்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் கப்பல்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கப்பல்களுக்கு கொடி பதிவு, துறைமுகங்களுக்கான நுழைவு சீட்டு சான்றிதழ் போன்றவற்றை, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனைச் சேர்ந்த ‘லாயிட்ஸ் ரெஜிஸ்டர்’ நிறுவனம் தான் வழங்கி வருகிறது.

கேட்டிக் நிறுவனத்தின் கப்பல்களுக்கான சான்றிதழை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது குறித்து லாயிட்ஸ் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘ரஷ்ய எண்ணெய் வர்த்தகம் மீதான பொருளாதாரத் தடைக்கு அனைவரும் உடன்பட்டாக வேண்டும்.

‘இதை மீறும் கப்பல் கள் எந்த நாட்டைச் சேர்ந்ததாக இருந்தாலும் அவற்றுக்கான சான்றிதழ்களை நாங்கள் திரும்பப் பெறுகிறோம்’ என்றனர்.

இதேபோல், அமெரிக்க மற்றும் ரஷ்ய காப்பீட்டு நிறுவனங்களும், கேட்டிக் நிறுவனத்தின் கப்பல்களுக்கு காப்பீடு வழங்க மறுத்துள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.