வைகோ: உக்ரைன் பிரச்சனைக்கு நாட்டாமை செய்வீங்க.. மணிப்பூருக்கு வரமாட்டிங்களா.?

மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பாஜக அரசாண்டு வருகிறது. மாநிலத்தில் நாகா மற்றும் குக்கு இன மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்தநிலையில் மைத்தேயி என்ற இனக்குழுவினரை பழங்குடியின பட்டியலில் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவு ஏற்கனவே பழங்குடி பட்டியலில் இருக்கும் நாகா மற்றும் குக்கு இன மக்களின் உரிமைகளை பாதிப்பதாக கூறி அந்த மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.

அதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் கலவரம் வெடித்தது. பல்வேறு மக்கள் பாதிக்கப்பட்டனர். வீடுகள் கொழுத்தப்பட்டன. பாஜக ஆள்வதால் அந்த மைத்தேயி மக்களை கலவரத்திற்கு ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டும் எழுந்தது. ஏனெனில் பழங்குடி கிறிஸ்தவர்களான நாகா மற்றும் குக்கு இனமக்கள் குறிவைத்து தாக்கப்படுவதும், கிறிஸ்தவ தேவாலயங்கள் தீயிட்டு கொழுத்தப்படுவதும் அதையே காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மேலும் மைத்தேயி இனமக்களுக்கு துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வழங்கப்பட்டு, இனத்தூய்மை வாதம் என்ற பெயரில் அங்கு இன அழிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அரசின் துணையோடு மைத்தேயி மக்கள் கலவரத்தில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். பழங்குடி மக்கள் சாரைசாரையாக குடிபெயர்ந்தும், காடுகளில் தஞ்சம் அடையும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கலவரத்தை கட்டுப்படுத்த முடியாமல் அங்கு துணை ராணுவப்படை அழைக்கப்பட்டு, இணையதளம் முடக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இட ஒதுக்கீடு சம்மந்தமான நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக மலை பழங்குடியினர் மற்றும் பழங்குடி அல்லாதவர்களுக்கு இடையே வன்முறை வெடித்திருக்கிறது. பத்தாயிரம் ராணுவ வீரர்களைக் குவித்தும் வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

நூற்றுக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டு, ஆயிரக்கணக்கான வீடுகள் எரிந்து, பொது அமைதி கெட்டு கடந்த 22 நாட்களாக சின்னஞ் சிறிய மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. ரஷ்யா உக்ரைன் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நாட்டாண்மை செய்யும் பிரதமர் மோடி, மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட முயற்சி எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது கவலை அளிக்கிறது. அசாம் சென்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா, மணிப்பூர் சென்று அமைதியை உருவாக்க முயற்சிக்காதது ஏன்?

உள்நாட்டு கலவரத்தால் பாதிக்கப்பட்டிருந்த மணிப்பூர், சில ஆண்டுகளுக்கு முன்பு அமைதி வழிக்குத் திரும்பி, வளர்ச்சியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. தற்போது மீண்டும் அமைதி சீர்குலைக்கப்பட்டு, இணையதளம் முடக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, மணிப்பூரில் ஏற்பட்டுள்ள வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவந்து, அம்மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ என வைகோ தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.