வாஷிங்டன், -தீபாவளி பண்டிகைக்கு, அமெரிக்காவில் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி, அந்நாட்டு பார்லிமென்டில், பெண் எம்.பி., கிரேஸ் மெங் மசோதா கொண்டு வந்துள்ளார்.
கையெழுத்து
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி, அமெரிக்கா, பிரிட்டன் உட்பட பல்வேறு நாடுகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு அமெரிக்காவில் பொது விடுமுறை அளிக்க வலியுறுத்தி, அந்நாட்டு பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையில், எம்.பி., கிரேஸ் மெங் மசோதா கொண்டு வந்துள்ளார்.
இந்த மசோதா பார்லிமென்டில் நிறைவேறி, அதில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திடும் போது சட்டமாக அமலாகும்.
இது குறித்து, கிரேஸ் மெங் கூறியதாவது:
தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டால், குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட முடியும்.
முக்கியத்துவம்
பல்வேறு கலாசாரங்களை மதிப்பது என்ற அரசின் கொள்கை உறுதி செய்யப்படும்.
தீபாவளி பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து அமெரிக்கர்கள் தெரிந்து கொள்ளவும் உதவும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிரேஸ் மெங்கின் முயற்சியை, நியூயார்க் செனட் உறுப்பினர் ஜெரெமி கோனே, நியூயார்க் சிட்டி கவுன்சில் உறுப்பினர் சேகர் கிருஷ்ணன், சீக்கிய கூட்டமைப்பின் மூத்த கொள்கை ஆலோசகர் சிங் அட்டரிவாலா,
இந்தோ – கரீபிய கூட்டமைப்பின் ரிச்சர்ட் டேவிட், ஹிந்துக்களுக்கான மனித உரிமை அமைப்பின் கொள்கை இயக்குனர் ரியா சக்ரவர்த்தி, சர்வதேச அகிம்சை நிறுவனத்தின் தலைவர் நீடா ஜெயின், இந்திய வம்சாவளியினர் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்