கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் திரூர் நகரில் வசித்து வந்தவர் சித்திக் (58). இவருக்குச் சொந்தமான ஓட்டல் கோழிக்கோடு எலத்திபாலம் அருகே உள்ளது. இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு சித்திக் மாயமாகி உள்ளார். அவரை குடும்பத்தினர் எங்குத் தேடியும் கிடைக்காத நிலையில் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பெயரில் விசாரணை நடத்தியதில் அவரின் அவரின் ஏடிஎம் கார்டில் இருந்து பெரிய தொகை எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் பணத்திற்கு அவரை கடத்திருப்பார்கள் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையை முடக்கினர்.
இந்த நிலையில், பாலக்காடு அருகே அட்டப்பாடியை அடுத்த அகழி வனப்பகுதியில் பெரிய சூட்கேஸ்சில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் அடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை அந்த வழியாகச் சென்றவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அகழி போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் காணாமல் போன ஓட்டல் அதிபரில் உடல் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, கோழிக்கோடு மற்றும் அகழி மலப்புரம் போலீசார் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். அதில் ஓட்டலில் வேலை செய்து வந்த பாலக்காடு செற்புழச்சேரி நகரைச் சேர்ந்த சிபில் (36) மற்றும் பர்ஹானா (34) ஆகியோர் மாயமானதும் தெரியவந்தது. இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர்கள் இருவரும் சென்னையில் இருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் இணைந்து தான் ஓட்டல் அதிபரை வெட்டி சூட்கேசில் வைத்து வனப்பகுதியில் போட்டுவிட்டு வந்ததாகவும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் அழைத்து வந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.