நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்குக் கிளம்பிய தமிழ்நாட்டு ஆதீனங்கள்!
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!
தலைநகர் டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின்கீழ், புதிய நாடாளுமன்றக் கட்டடம் பெரும் மதிப்பீட்டில் பல்வேறு அம்சங்களுடன் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய தினம் பிரதமர் மோடி, இந்த புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்கவிருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் டெல்லியில் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த புதிய நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் இருக்கைக்கு அருகில், தமிழ்நாட்டின் செங்கோல் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தச் செங்கோலை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்கள் பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.
அதன்படி அந்தச் செங்கோலானது நேற்றைய தினம் தமிழ்நாட்டு ஆதீனங்களால், பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. அதற்காக ஆதீனங்கள் அனைவரும், நேற்று பிரதமர் மோடியின் டெல்லி இல்லத்துக்குச் சென்றிருந்தனர். அங்கு பிரதமர் அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றார்.
அதைத் தொடர்ந்து, இன்றைய தினம் நாடாளுமன்றத் திறப்பு விழா இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. காலை 7:30 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்தி சிலைக்கு அருகே பூஜைகளுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. இதில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மாநிலங்களவை துணைத் தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்கின்றனர். பின்னர், காலை 8:30 மணி முதல் 9 மணி வரை செங்கோல் வைப்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.
சபாநாயகரின் இருக்கைக்கு அருகே கண்ணாடி பெட்டியில் செங்கோல் வைக்கப்படவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 ஆதீனங்கள் பங்கேற்கிறார்கள். அதைத் தொடர்ந்து 9:30 மணிக்கு பண்டிதர்கள், துறவிகள் உள்ளிட்டோர் பங்கேற்கும் பிரார்த்தனைக் கூட்டம் நடைபெறுகிறது.
விழாவின் இரண்டாம் கட்டமாக மதியம் 12 மணிக்கு , பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை திறந்து வைக்கிறார். அதைத் தொடர்ந்து, விழாவில் இரண்டு குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. பின்னர், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோரின் வாழ்த்துரையைத் தொடர்ந்து, மக்களவை சபாநாயகர் பேசுகிறார். அதையடுத்து திறப்பு விழாவின் நினைவாக ரூ.75 நாணயம் மற்றும் தபால் தலை வெளியிடப்படுகின்றன.
நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வாக பிரதமர் மோடி 2:30 மணிக்கு உரையாற்றுகிறார். அத்துடன் திறப்பு விழா நிறைவடைகிறது.