புதிய பாராளுமன்ற கட்டிடம் இன்று திறப்பு : பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்..!!

புதிய பாராளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். 4 மாடிகள் கொண்ட இந்தப் புதிய பாராளுமன்றம் ரூ. 970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் 1,224 எம்.பி.க்கள் அமர முடியும்.

இந்திய ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் பிரம்மாண்ட அரசியல் சாசன அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர கேன்டீன், வாகன பார்க்கிங் வசதிகளும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய பாராளுமன்ற கட்டிடம் இன்று 28-ம் தேதி திறக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இதனை திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்றத்தை, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க இருக்கிறார். விழாவில் பங்கேற்க மக்களவை மற்றும் மாநிலங்களவையின் உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றம் நாட்டின் பன்முகத்தன்மையைப் போற்றும் நோக்கில் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பொருட்கள் வாங்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் மிக முக்கிய அம்சமாக, நாடு சுதந்திரம் அடைந்தபோது அதை அடையாளப்படுத்தும் விதமாக நடைபெற்ற செங்கோல் வழங்கும் நிகழ்வில் திருவாவடுதுறை ஆதீனத்தால் வழங்கப்பட்ட செங்கோல் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்பட உள்ளது. இந்த செங்கோல், மக்களவை சபாநாயகரின் இருக்கையின் மேல் நிறுவப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு, தமிழ்நாட்டின் திருவாவடுதுறை ஆதீனம், மதுரை ஆதீனம், தருமபுர ஆதீனம் உள்ளிட்ட 19 ஆதீனகர்த்தர்கள் டெல்லி சென்றுள்ளனர். அவர்களுடன் பாரம்பரிய இசைக் கலைஞர்களும் சென்றுள்ளனர்.

புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட்டுள்ளது. 4 மாடிகளைக் கொண்டது. நாடாளுமன்றத்தின் கட்டிட பரப்பளவு 64,500 சதுர மீட்டர். இந்த கட்டிடம் ஞான வாயில், சக்தி வாயில், கர்ம வாயில் என மூன்று வாயில்களைக் கொண்டுள்ளது. விஐபி-க்கள், எம்பிக்கள், பார்வையாளர்கள் செல்வதற்கு தனித்தனி வாயில்கள் இருக்கும்படி வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற மக்களவை 888 இருக்கைகள் கொண்டதாகவும், மாநிலங்களவை 300 இருக்கைகள் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெறும்போது மக்களவையில் 1,280 பேர் அமரக்கூடிய வகையில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.