சென்னை: ஜப்பான் நாட்டில் உள்ள, உலகப் புகழ்பெற்ற ஒசாகா கோட்டையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டுக்குப் பிறகு, அந்நாட்டைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களின் முதன்மை அலுவலர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஒசாகா மாகாண துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜி, ஜப்பான் நாட்டின் பழம்பெரும் கோட்டையான ஒசாகா கோட்டையின் சிறப்பு குறித்து விளக்கி, அதைப் பார்வையிடுமாறு முதல்வருக்கு அழைப்பு விடுத்தார்.
அவரது அழைப்பை ஏற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 16-ம்நூற்றாண்டில் கட்டப்பட்ட, உலகப் புகழ்பெற்ற ஒசாகா கோட்டையை பார்வையிட்டார்.
இந்தக் கோட்டை அசுச்சி-மோமோயாமா காலத்தில், 16-ம் நூற்றாண்டில் ஜப்பானை ஒன்றிணைப்பதில் முக்கியப் பங்கு வகித்தது. சுமார் 61,000 சதுர மீட்டர் பரப்பு கொண்ட இக்கோட்டை, ஜப்பானிய அரசால் முக்கியமான கலாச்சார சின்னமாகப் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது அகழிகள், கிணறுகள், தோட்டங்கள் மற்றும் இயற்கைச் சூழலுடன் அமைந்துள்ளது.
செம்மொழியாம் தமிழின் பெருமையையும், தமிழர் நாகரிகம், பண்பாட்டையும் உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில், பண்டைய தமிழர்களின் செழுமையான பண்பாட்டுச் சான்றுகளை உலகம் அறிந்து கொள்ளும் வகையில், பல்வேறு அகழ்வாராய்ச்சிப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
மேலும், கி.மு. 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கீழடி நாகரிகம் பற்றிய அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை, உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகத்தை நிறுவியுள்ளது.
தமிழ்நாட்டின் பண்டைய பொருநை ஆற்றங்கரையின் நாகரிகப் பெருமையை வெளிப்படுத்தும் வகையில், ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கிடைத்த அரிய தொல்பொருட்களை அழகுறக் காட்சிப்படுத்தஉலகத் தரத்துடன் பொருநை அருங்காட்சியகத்தை அமைக்கஅடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இதுபோன்ற பண்டைய கலாச்சார பெருமைகைளை மீட்டெடுத்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
பண்டைய கலாச்சார சின்னங்களை போற்றிப் பாதுகாத்திடும் நடவடிக்கைகளில் ஜப்பான் அரசும், தமிழ்நாடு அரசும் ஒன்றுபோலவே செயலாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில், அமைச்சர் டிஆர்பி.ராஜா, தொழில் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் வே.விஷ்ணு, ஒசாகா கோட்டை அருங்காட்சியக இயக்குநர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.