டோக்கியோ : ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டார். வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரயில்களுக்கு இணையான ரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயனடைய வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்திடவும், தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது ஜப்பானில் தமிழக முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பானில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்.
ஒசாகாவில் உள்ள இந்திய தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில், ஒசாகாவில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். தற்போது, ஜப்பானின் ஒசாகா மாகாணத்தில் இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு புல்லட் ரெயிலில் பயணம் செய்கிறார்.
புல்லட் ரயிலில் பயணம் செய்வது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், “ஒசாகா நகரிலிருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்கிறேன். ஏறத்தாழ 500 கி.மீ தூரத்தை இரண்டரை மணிநேரத்திற்குள் அடைந்துவிடுவோம்.
உருவமைப்பில் மட்டுமல்லாமல் வேகத்திலும் தரத்திலும் புல்லட் ரெயில்களுக்கு இணையான இரயில் சேவை நமது இந்தியாவிலும் பயன்பாட்டுக்கு வர வேண்டும்; ஏழை – எளிய – நடுத்தர மக்கள் பயனடைந்து, அவர்களது பயணங்கள் எளிதாக வேண்டும்” எனத் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.