சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டில் சோதனையிடச் சென்ற வருமான வரித் துறையினர் தாக்கப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இதை விசாரணைக்கு ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதுதொடர்பாக சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராமச்சந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்த சென்றபோது அவர்களை பணி செய்யவிடாமல் கரூரில் உள்ள திமுகவினர் தடுத்துள்ளனர். அத்துடன் அதிகாரிகள் சென்ற வாகனங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
பெண் அதிகாரி ஒருவரை சூழ்ந்துகொண்டு அவரது கைப்பையை இழுத்து தள்ளிவிட்டுள்ளனர். 9 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை தடுக்கப்பட்டுள்ளது.
அந்த அதிகாரிகள் பின்னர் காவல் நிலையத்தில் புகார் அளித்து போலீஸ் பாதுகாப்புடன் இந்த இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த இடைப்பட்ட நேரத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்த முக்கிய ஆவணங்கள், சான்று பொருட்கள், ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை திமுகவினர் ரகசியமாக இடமாறுதல் செய்து இருக்கலாம். வருமான வரித்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்ட ஒன்றாகவே தெரிகிறது.
டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை தடையின்றி மாற்றிக் கொள்ளலாம் என்ற அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறிவிப்புக்கும், அமைச்சருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் மற்றும் அவரது சகோதரர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய திடீர் சோதனைக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது.
வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த புகார்களின் பேரில் திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், திமுகவினர் அளித்த புகாரின்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து இருப்பது வேடிக்கையாக உள்ளது.
இந்த விவகாரத்தில் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸார் தயக்கம் காட்டுவர்.
எனவே, இதுகுறித்தும், சோதனைக்கு சென்ற வருமானவரித் துறை அதிகாரிகளை தடுத்துதாக்குதலில் ஈடுபட்டது குறித்தும்சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கோரியிருந்தார்.
இந்நிலையில் இந்த மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்ற பதிவுத் துறை, ‘இந்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரர் பாதிக்கப்பட்ட நபர் அல்ல. வழக்கறிஞர்கள் பொதுநல வழக்குதொடருவதற்கான விதிமுறைகளை முறையாக பின்பற்றவில்லை. எனவே இந்த மனு விசாரணைக்கு பட்டியலிட உகந்தது இல்லை’ என்று கூறி திருப்பி அளித்துவிட்டது.