ஓர் உணவகத்தில் இரண்டு சமையல்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் பிரமாதமாகச் சமைக்கிறவர்கள். அதனால், அவர்கள் செய்கிற புதுமையான உணவுகளைச் சாப்பிடுவதற்கென்றே வாடிக்கையாளர்கள் அந்த உணவகத்தைத் தேடி வருவார்கள்.
ஒருநாள், முதல் சமையல்காரர் மாறுபட்ட ஒரு சிறப்பு உணவைச் சமைக்கத் திட்டமிட்டார். அதற்கு அவருக்கு ஓர் எலுமிச்சம்பழம் தேவைப்பட்டது. அதே நாளில், இரண்டாவது சமையல்காரரும் இன்னொரு சிறப்பு உணவைத் திட்டமிட்டிருந்தார். அதற்கும் எலுமிச்சம்பழம் தேவை.
அதனால், அவர்கள் இருவரும் எலுமிச்சம்பழத்தைத் தேடி அந்த உணவகத்தின் காய்கறி அறைக்குச் சென்றார்கள். அங்கு கூடைக்குள் ஒரே ஓர் எலுமிச்சம்பழம்மட்டும் இருந்தது.
இப்போது, இரண்டு சமையல்காரர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஒரே நேரத்தில், ஒரே குரலில், `எனக்கு அந்த எலுமிச்சம்பழம் வேண்டும்’ என்றார்கள். இருவருடைய குரலிலும் உறுதி தெரிந்தது. `நான் விட்டுக்கொடுக்கமாட்டேன். அந்த எலுமிச்சம்பழம் எனக்குத்தான்’ என்று இருவரும் சொல்லாமல் சொன்னார்கள்.
இந்தக் கதை இந்த இடத்தில் ஐந்து பகுதிகளாகப் பிரிகிறது. அதாவது, ஒரே கதைக்கு ஐந்து வெவ்வேறு சாத்தியமுள்ள முடிவுகள். ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1. போட்டியிடுதல்:
இரு சமையல்காரர்களும் ஒருவரோடு ஒருவர் கடுமையாகப் போட்டி போட்டுக்கொள்கிறார்கள். அந்தக் கடைசி எலுமிச்சம்பழம் தனக்குத்தான் வேண்டும் என்பதில் இருவரும் பிடிவாதமாக இருக்கிறார்கள். மற்றவருடைய தேவையை இருவரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. இவர்கள் மோதிக்கொண்டிருப்பதால் இரண்டு சிறப்பு உணவுகளும் சமைக்கப்படுவதில்லை. அதனால் வாடிக்கையாளர்களுக்கும் இழப்பு, உணவகத்துக்கும் இழப்பு.
ஒருவேளை, அந்த இருவரில் யாரோ ஒருவர் இந்தப் போட்டியில் வெல்லலாம். ஆனால், அதன் பொருள், இன்னொருவர் தோற்றுப்போகிறார். அவருடைய மன வருத்தம் அந்த உணவகத்துக்கு இழப்புதான்.
2. தவிர்த்தல்:
இரு சமையல்காரர்களும் சண்டையைத் தவிர்க்க முயல்கிறார்கள். அதனால், எலுமிச்சம்பழத்தை மறந்துவிட்டு வேறு ஏதோ சமைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். இங்கேயும் இரண்டு சிறப்பு உணவுகளும் சமைக்கப்படுவதில்லை. இங்கேயும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பு, உணவகத்துக்கும் இழப்பு.
3. விட்டுக்கொடுத்தல்:
இரு சமையல்காரர்களும் ஒருவருக்கு மற்றவர் விட்டுக் கொடுத்துவிடுகிறார்கள். அதாவது, முதல் சமையல்காரர், ‘பரவாயில்லை, இது என்னைவிட உங்களுக்குதான் அதிகம் தேவை. இதை நீங்களே எடுத்துக்கோங்க’ என்கிறார். இரண்டாவது சமையல்காரர், `இல்லை, இல்லை, நீங்க எடுத்துக்கோங்க’ என்கிறார். இந்த இருவரில் யாரோ ஒருவருக்கு எலுமிச்சம்பழம் கிடைக்கிறது. அவருடைய சிறப்பு உணவு சமைக்கப்படுகிறது. அதே நேரம், விட்டுக்கொடுத்தவருடைய சிறப்பு உணவு சமைக்கப்படுவதில்லை. அது வாடிக்கையாளர்களுக்கு இழப்பு, உணவகத்துக்கும் இழப்பு. அத்துடன், இப்படி அடிக்கடி விட்டுக்கொடுப்பதால் அந்தச் சமையல்காரருடைய மன அமைதியும் கெடலாம்.
4. இணங்கிப்போதல்
இரு சமையல்காரர்களும் போட்டியிடாமல், சண்டையைத் தவிர்க்காமல், ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்காமல் இணங்கிப்போகிறார்கள். ‘உனக்கும் வேணாம், எனக்கும் வேணாம். இந்த எலுமிச்சம்பழத்தை வெட்டி ஆளுக்குப் பாதியா எடுத்துக்குவோம்’ என்கிறார்கள். இங்கு இரண்டு சிறப்பு உணவுகளும் சமைக்கப்படுகின்றன. அதனால், மற்ற முடிவுகளைவிட இது சற்று சிறப்பானதுதான். ஆனால், பாதி எலுமிச்சம்பழத்தை வைத்து அந்த உணவுகளை ஓரளவுக்குதான் சமைக்க இயலும். அதனால், வாடிக்கையாளரோ உணவகமோ முழு மகிழ்ச்சியைப் பெற வாய்ப்பு குறைவு.
5. சேர்ந்து பணியாற்றுதல்:
இரு சமையல்காரர்களும் சற்று நிதானமாகச் சிந்திக்கிறார்கள். ‘நீங்கள் இந்த எலுமிச்சம்பழத்தை எப்படிப் பயன்படுத்தப்போகிறீர்கள்?’ என்று கேட்கிறார் முதல் சமையல்காரர்.
‘நான் இதைச் சாறு பிழிந்து பயன்படுத்துவேன்’ என்கிறார் இரண்டாவது சமையல்காரர்.
‘அப்படியானால், உங்களுக்கு எலுமிச்சம்பழச் சாறுதான் வேண்டும், அதன் சதை வேண்டாமா?’
‘ஆமாம்.’
‘அட, என்னுடைய சிறப்பு உணவுக்குச் சதைதான் வேண்டும். சாறு வேண்டாம்’ என்கிறார் முதல் சமையல்காரர். ‘இப்போது நீங்கள் இதைப் பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளுங்கள், சதையை என்னிடம் கொடுத்துவிடுங்கள். நம் இருவருடைய சிறப்பு உணவுகளையும் பிரமாதமாகச் சமைத்து மக்களை அசத்துவோம்.’
இந்தக் கதையில் வரும் இரண்டு சமையல்காரர்கள் வேறு யாரும் இல்லை. நீங்களும் உங்களுடன் பணியாற்றுகிற மற்றவர்களும்தான். உங்களுடைய வேலைக்கு எலுமிச்சம்பழம் தேவைப்படாமல் இருக்கலாம். ஆனால், வேறு பல விஷயங்கள் தேவை. அதைப் பெறுவதற்கென நீங்கள் இருவரும் சில நேரங்களில் போட்டியிடுகிறீர்கள், வேறு சில நேரங்களில் சண்டையைத் தவிர்க்கிறீர்கள், விட்டுக்கொடுக்கிறீர்கள், இணங்கிப்போகிறீர்கள், சேர்ந்து பணியாற்றுகிறீர்கள். இது உலகம்முழுக்கப் பலப்பல அலுவலகங்களில் நாள்தோறும் நடக்கிற விஷயம்தான்.
கென்னெத் W. தாமஸ், ரால்ஃப் H. கில்மன் என்ற ஆய்வாளர்கள் 1970களில் பணியிட முரண்களைப்பற்றி ஆராய்ச்சி செய்து இந்த ஐந்து வழிகளையும் முன்வைத்தார்கள். இவை அவர்களுடைய பெயர்களால் தாமஸ் கில்மன் மாதிரி என்று அழைக்கப்படுகின்றன. பிறருடன் பணியாற்றும்போது இந்த ஐந்து வழிகளையும் மனத்தில் வைத்திருந்தால் இருதரப்பினருக்கும் நன்மை கொடுக்கக்கூடிய நல்ல தீர்வுகளை நாம் கண்டறியலாம்.
மேலுள்ள ஐந்து வழிகளையும் இன்னொருமுறை நிதானமாகப் படித்துப் பாருங்கள். முதல், மூன்றாவது வழிகளில் ஒருவர்தான் வெல்கிறார், இன்னொருவர் தோற்று வருந்துகிறார். இரண்டாவது வழியில் யாரும் வெல்வதில்லை. நான்காவது வழியில் இருவருக்கும் பாதி வெற்றிதான் கிடைக்கிறது. அதனால், ஐந்தாவது வழிதான் உண்மையான வெற்றி. அதைத்தான் நாம் எப்போதும் தேடவேண்டும்.
ஆனால், இந்த ஐந்தாவது வழி, அதாவது, இருவரும் வெல்லும் வழி எப்போதும் கிடைத்துவிடாது. இந்தக் கதையில் ஒருவேளை இருவருக்கும் எலுமிச்சம்பழச் சாறு தேவைப்பட்டிருந்தால்? அப்போது ஐந்தாவது வழிக்கு வாய்ப்பில்லை.
அதே நேரம், ஐந்தாவது வழி என ஒன்று இருக்கிறது, இருவரும் வெல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது என்பதே பெரும்பாலானோருக்குத் தெரியாது. அதனால், அவர்கள் அதைத் தேடுவது இல்லை. உங்களுக்கு இந்த ஐந்தாவது வழி தெரிந்திருந்தால் நீங்கள் அதைத் தேடுவீர்கள், உங்களைச் சுற்றியுள்ள எல்லாரும் வெல்வதற்கு உதவுவீர்கள். அது உங்களுடைய தனிப்பட்ட முன்னேற்றத்துக்குத் துணைநிற்கும். அத்துடன், உங்கள் நிறுவனத்துக்கும் நன்மை தரும்.
அதனால், எப்போதும் ஐந்தாவது வழியைத் தேடுவோம். அந்தப் பாதையில் நம்மால் எவ்வளவு தொலைவு முன்னேற இயலுகிறதோ அவ்வளவு நல்ல தீர்வு நமக்குக் கிடைக்கும்!
(தொடரும்)