ஶ்ரீவில்லிபுத்தூர்: ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டியில் எதிர் எதிரே சென்ற அரசு பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநர் உட்பட இருவர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.
ஊட்டியில் இருந்து செங்கோட்டை நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து புறப்பட்டது. பேருந்தை தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (45) என்பவர் ஒட்டி வந்தார். அதேபோல் ராஜபாளையத்தில் கலை நிகழ்ச்சியை முடித்து விட்டு, கலை குழுவை சேர்ந்த 18 பேர் மதுரையை நோக்கி வேனில் சென்றனர். வேனை மதுரையை சேர்ந்த ஶ்ரீதர்(31), என்பவர் ஓட்டிச் சென்றார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே லட்சுமியாபுரம் பகுதியில் சென்றபோது அரசு பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேன் ஓட்டுநர் ஸ்ரீதர்(31), வேனில் பயணித்த ரகு(24) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாக மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஜேசிபி எந்திரம் மூலம் விபத்து நடந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
இந்த விபத்தில் மதுரையை சேர்ந்த பாசப்பிரியன்(26), சரவணகுமார் (23), மலைச்சாமி(28), அருண்குமார் (24), நந்தகுமார்(30), கார்த்திக் (29), சந்தியா (23), வாடிப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா (18), விஸ்வநாதன்(19), பேருந்து ஓட்டுநர் சுரேஷ்குமார் (45), குத்துக்கல்வலசையைச் சேர்ந்த நடத்துநர் பூதத்தான்(52) ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை போலீஸார் மீட்டு ஶ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விருதுநகர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் விருதுநகர் எஸ்.பி சீனிவாச பெருமாள், டி.எஸ்.பி சபரிநாதன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.