சென்னை விமான நிலையத்தில் மூன்று கோடிக்கும் அதிகமான ஹவாலா பணம் பறிமுதல்.!!
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நேற்று முன்தினம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடைமைகளை, பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனை செய்து அனுப்பி கொண்டிருந்தனர். அப்போது ஒரு ஆண் பயணி மீது, பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
உடனே பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பயணியை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அந்தப் பயணியை விசாரணை செய்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.
இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பயணியை தனியறைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, அந்தப் பயணியின் உள்ளாடைகளுக்குள் கட்டுக்கட்டாக, அமெரிக்க டாலர் கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்தப் பயணியின் சூட்கேஸைத் திறந்து பார்த்தனர். அதிலும், கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் கரன்சி மற்றும் சவுதி அரேபியா ரியால் கரன்சி உள்ளிட்டவை இருந்தன.
அவையனைத்தையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்தப் பயணியை கைது செய்து விசாரணை நடத்தியதில், இந்த பணம் கணக்கில் இல்லாத ஹவாலா பணம் என்றும், வேறு ஒருவர் அந்தப் பணத்தை, இவரிடம் கொடுத்து சிங்கப்பூருக்கு கடத்துகிறார் என்பதும் தெரிய வந்தது.
சென்னை விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் மூன்று கோடிக்கும் அதிகமான ஹவாலா பணம் சிக்கியது விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.