கரூர்: வருமான வரித்துறையினருக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதால் வருமான வரித்துறை அதிகாரிகள் அச்சமடைய மாட்டார்கள் என்று வருமான வரித்துறை புலனாய்வு இயக்குநர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.
மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாருக்குச் சொந்தமான கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட சென்றபோது தாக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் அவர்களை சென்னை வருமான வரித்துறை புலனாய்வுப்பிரிவு இயக்குநர் சிவசங்கர் நேரில் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கரன், ”சோதனைக்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை அங்கிருந்தவர்கள் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் வருமான வரித்துறை அதிகாரிகள் காயமடைந்தனர். அவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது. ஆய்வாளர் காயத்ரி உள்ளிட்ட 2 பேருக்கு கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் வேண்டுமென்றே அடித்துள்ளனர். இதுகுறித்து எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு 8 பேர் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
யாரெல்லாம் தாக்குதலில் ஈடுபட்டார்களோ, யாரெல்லாம் ஆதாரங்களை அழித்தார்களோ அவர்கள் மீது காவல்துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமான வரித்துறை அதிகாரி, அவர்களை தாக்கியதற்கான ஆதாரம் இருந்தால் காட்டட்டும். நடந்தவை அனைத்தும் ஊடகங்கள் அறியும். அனைவருக்கும் தெரிந்தே அனைத்தும் நடந்தன. நாங்கள் புகார் கொடுத்ததற்காக, அவர்களும் திருப்பி புகார் கொடுத்தால் கொடுக்கட்டும். அதற்காக நாங்கள் அஞ்ச மாட்டோம். வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், தொகை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிப்பார்கள்” என தெரிவித்தார்.