சிலாபம் களப்பினால் ஏற்படும் சுகாதார அச்சுறுத்தலுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ்

சிலாபம் களப்பு மாசடைதல் தொடர்பான பிரச்சினையை உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன் விசேட அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்து தீர்வைப் பெற்றுத் தருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

சிலாபத்திற்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சிலாபம் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற கடற்றொழிலாளர்களுடனான சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சிலாபம் களப்பினுள் அப்குதியிலுள்ள இறால் பண்ணைகளால் வெளியேற்றப்பப்படும் இரசாயனம் கலந்த கழிவுநீர் மற்றும் சிலாபம் நகர சபை, சிலாபம் பொது வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பொருட்கள் கலப்பதன் காரணமாக களப்பு நீர் கடுமையாக மாசடைந்துள்ளதாக கடற்றொழிலாளர்கள் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில், துறைசார் அதிகாரிகள் சகிதம் நேற்று (27) அப்பகுதிக்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர், நேரடியாக நிலமைகளை அவதானித்தார்.

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில், சிலாபம் களப்பு மாசடைவதற்கு, இறால் பண்ணைகளால் வெளியேற்றப்படும் இரசாயனம் கலந்த கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் களப்பில் கலப்பதுவே காரணமாக இருப்பதை தான் அவதானித்ததாகவும் தெரிவித்த அமைச்சர், சிலாபம் பொது வைத்தியசாலை மற்றும் நகர சபையினால் வெளியேற்றப்படும் குப்பை கூளங்கள் மற்றும் கழிவுப் பொருட்களும் களப்பு மாசடைதலுக்கு முக்கிய காரணம் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இப் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக சிலாபம் பிரதேச சபைத் தலைவர் தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் அதில் கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, நாரா மற்றும் நெக்டா ஆகிய நிறுவனங்களின் உயரதிகாரிகளும் உறுப்பினர்களாக செயற்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இதன்போது எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட்டபோது, சிலாபம் பிரதேச கடற்றொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், சிலாபம் கடற்றொழில் துறைமுக வானொலி தொடர்பாடல் கட்டமைப்பு சரியாக இயங்குவதில்லை போன்ற விடயங்கள் கடற்றொழிலாளர்களினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், வானொலி தொடர்பாடல் கட்டமைப்பை புனரமைப்பதற்கு சிறிது கால அவகாசம் தேவையெனவும், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் இப்பகுதி கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் தொடர்பான விபரங்களை வழங்குமாறும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.