புதிய பார்லிமென்டில் செங்கோல்! பிரதமருக்கு நன்றி தெரிவித்த ரஜினி-இளையராஜா!!
மோடி தலைமையிலான பா.ஜ., அரசின் 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று புதிய பார்லிமென்ட் கட்டடம் திறக்கப்படுகிறது. இந்த பார்லிமென்டில் இடம் பெற உள்ள செங்கோல் நேற்று இரவு 7:00 மணிக்கு பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி ஆதீனங்களிடம் ஆசி பெற்றார். அதோடு இன்று நடைபெறும் புதிய பார்லி., கட்டட திறப்பு விழாவில் 21 ஆதீனங்களும் பங்கேற்க உள்ளார்கள். அவர்கள் அனைவரும் நேற்று பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினார்கள்.
அப்போது ஆதீனங்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, நீங்கள் எனது இல்லத்திற்கு வந்திருப்பது எனது அதிர்ஷ்டம். சிவபெருமானின் ஆசீர்வாதத்தால் சிவ பக்தர்களாகிய உங்களை தரிசனம் செய்யக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அதோடு சுதந்திரத்திற்கு பிறகு புனித செங்கலுக்கு உரிய மரியாதை கொடுக்க கௌரவமான பதவி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் இந்த செங்கோல் பிரயாக்ராஜ் ஆனந்த் பவனியில் வாக்கிங் ஸ்டிக்காக காட்சிக்கு வைக்கப்பட்டது. நாங்கள் அந்த செங்கோலை வெளியே கொண்டு வந்துள்ளோம் என்றும் பிரதமர் மோடி கூறி இருக்கிறார்.
இந்த நிலையில் செங்கோலை புதிய பார்லி.,யில் வைப்பதற்கு பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து தனது டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், இந்திய நாட்டின் புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் ஜொலிக்க போகும் தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் செங்கோல். தமிழர்களுக்கு பெருமை சேர்த்த மதிப்பிற்குரிய பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி என்று பதிவிட்டுள்ளார் ரஜினி.
அதேபோல் இசையமைப்பாளர் இளையராஜாவும் ஒரு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று புதிய பார்லி., கட்டடத்தை திறந்து வைக்கிறார். குடிமகனாகவும் பார்லி., உறுப்பினராகவும் புதிய கட்டட திறப்பு விழாவை மகிழ்ச்சியுடனும் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன். இந்த குறுகிய காலத்தில் கட்டடத்தை கட்டி முடிக்க துணை புரிந்த பிரதமர் மோடி மத்திய அரசு உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் உலகம் புதிய இந்தியாவை கொண்டாடும் இந்த தருணத்தில் இடைநிலை கொள்கைகள் மற்றும் முடிவு எடுப்பதற்கான இடமாக இந்த புதிய கட்டடம் மாற வேண்டும் என்று நான் பிரார்த்தனை செய்கிறேன்.
பழங்கால தமிழர்களின் கலாச்சாரம் மற்றும் பெருமையை வாய்ந்த மதிப்பிற்குரிய செங்கோலை கொண்ட அரச குடும்பத்தினர் அவர்களின் வெற்றிகரமாக ஆட்சி செய்தவர்கள் செங்கோலை ஒழுங்கு நேர்மை மற்றும் நெறிமுறைகளின் அடையாளமாக போற்றினர். அதனால் இத்தகைய செங்கோல் சரியான இடத்துக்கு திரும்ப வந்திருப்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று இளையராஜா தெரிவித்து இருக்கிறார்.