புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஒரு முக்கிய சிறப்பு பெற்றுள்ளது. இதன் முக்கிய இடத்தில் நிரந்தரமாக வைக்கப்பட இருக்கும், ‘செங்கோல்’ தென்னிந்தியாவின் தொடர்பை காட்டுவதாக உள்ளது.
இது மட்டுமின்றி ராஜஸ்தானின் பளிங்கு கற்கள், உத்தரபிரதேசத்தின் கம்பளத் தரை விரிப்புகள், திரிபுராவின் மூங்கில்கள் என பல்வேறு மாநிலங்களின் பங்களிப்புகள் புதிய கட்டிடத்தில் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் புதிய நாடாளுமன்றக் கட்டிடப் பணியாளர்கள் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.
இதன்படி, இந்தப் புதிய கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்ட இரும்புக் கம்பிகள் டையு டாமனில் இருந்தும் எம்-சாண்ட் ஹரியாணாவின் சர்க்கி தாத்ரியில் இருந்தும் செங்கற்கள் ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்தும் வந்துள்ளன.
உத்தர பிரதேசத்தில் உள்ளமிர்சாபூர், கம்பளத் தரைவிரிப்புகள் தயாரிப்புக்கு உலகப் புகழ்பெற்றதாகும். இங்கு முகலாயர்கள் பயன்படுத்தி வந்த பல்வேறு வகை கம்பளத் தரைவிரிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாரிக்கப்பட்ட கம்பள விரிப்புகள் புதிய நாடாளுமன்றம் முழுவதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ராஜஸ்தானின் பளிங்கு: ராஜஸ்தானின் பளிங்கு கற்கள்தான் கட்டிடத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இவை வரவழைக்கப்பட்டன. இங்கு வெட்டி எடுக்கப்பட்ட கற்களைத் தான் ஷாஜகான்உள்ளிட்ட முகலாய மன்னர்கள் தங்கள் கட்டிடங்களில் பயன்படுத்தினர். தாஜ்மகால் உள்ளிட்ட வடமாநில சுற்றுலாத் தலங்களின் கட்டிடங்களில் இவை இன்றும்மிளிர்கின்றன.
உதய்பூரில் இருந்து பச்சை பளிங்கு கற்கள், அஜ்மீர் மாவட்டத்தின் லக்காவில் இருந்து சிவப்பு பளிங்கு கற்கள், அம்பாஜி மற்றும் மக்ரானாவில் இருந்து வெள்ளை பளிங்கு கற்கள், கிஷ்ண்கரிலிருந்து இதர பளிங்கு கற்கள் கொண்டுவரப்பட்டன. இவை தவிர தோல்பூர் மாவட்டத்தின் சார்மதுராவிலிருந்து மணல்கற்கள் கொண்டு வரப்பட்டன.
உத்தரபிரதேசத்தின் நொய்டாமற்றும் ராஜஸ்தானின் ராஜ்நகரிலிருந்து கருங்கல் ஜல்லிகள் வந்தன. பளிங்கு கற்களின் பூ வேலைபாடுகளை ராஜஸ்தானின் சிற்பக் கலைஞர்கள் செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவின் நாக்பூரிலிருந்து மர வேலைப்பாடுகளுக்காக தேக்கு மரங்களும், இவற்றில் செய்த மேசை, நாற்காலி, சோபாக்கள் மும்பையில் இருந்தும் கொண்டு வரப்பட்டன. இக்கட்டிடத்தில் அமைந்த அசோக சக்கரம் மற்றும் வெளிப்புற அலங்கரிப்புகளுக்கு மத்திய பிரதேசத்தின் இந்தோரிலிருந்து கலவைப் பொருட்கள் வரவழைக்கப்பட்டன. பித்தளை வேலைபாடுகள் குஜராத்தின் அகமதாபாத்தில் செய்யப்பட்டுள்ளன.
2014 முதல் பிரதமராகத் தொடரும் நரேந்திர மோடி, தனதுஇரண்டாவது ஆட்சியில், ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ எனும்முழக்கத்தை தொடங்கி வைத்துள்ளார். இதில், நாட்டின் அனைத்துமாநிலங்களும் வேறுபாடுகள் இன்றி ஒன்றிணைந்து பணியாற்றவும் வலியுறுத்தி வருகிறார். இதற்கு எடுத்துக்காட்டாக, புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நாட்டின் பெரும்பாலான மாநிலப் பொருட்களின் பங்களிப்புகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.