சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல் 2023 பைனல் போட்டி இன்று நடக்கிறது.
இதையொட்டி நேற்றிலிருந்தே கலை நிகழ்ச்சிகள் ஒத்திகை, மேடை அலங்காரங்கள் உள்ளிட்டவை நடைபெற்று வந்தன. அகமதாபாத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டிருந்தது. மாலை 6:30 க்கு தொடங்கிய மழை விடாது பெய்தது. இந்நிலையில் இப்போது சில நிமிடங்களுக்கு முன்பு மழை ஓய்ந்திருக்கிறது. இச்சூழலில் போட்டி எப்படி நடைபெறும் முழுமையாக 20 ஓவர் போட்டி நடைபெறுமா அல்லது ஓவர்கள் குறைக்கப்படுமா எனும் கேள்வி எழுந்துள்ளது.
மாலை 6:30 க்கு தொடங்கிய மழை விடாது பெய்தாலும் இரவு 8.30 மேல் இடையிடையே சில நிமிடங்களுக்கு விட்டு விட்டு பெய்தது. இதனால் ரசிகர்கள் கேலரிக்குள் வருவதும் போவதுமாக இருந்தனர். 9:00 மணிக்கு மழை ஓய்ந்த நிலையில் அடுத்த 10 நிமிடத்திலேயே மைதானத்தில் விரிக்கப்பட்டிருந்த கவர்கள் வெளியே எடுக்கப்பட்டு, மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரமாக தொடங்கப்பட்டது.
9:35 மணிக்குள் போட்டி தொடங்கினால் முழுமையாக 20 ஓவர்கள் வீசப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போதைய சூழலில் அது சாத்தியமில்லை என்பதால், ஓவர்கள் குறைக்கப்படுவதற்கே அதிக வாய்ப்பிருக்கிறது. 10 மணிக்கு போட்டி தொடங்கினால் 17 ஓவர் போட்டியாக நடைபெறும். அதற்கு மேல் செல்ல செல்ல ஓவர்கள் குறைந்து கொண்டே இருக்கும். 5 ஓவர் போட்டியை நடத்தி முடிக்க 12:06 வரை நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் சாத்தியமில்லை எனில் ரிசர்வ் டேயில்தான் போட்டி நடக்கும்.
இந்த செய்தியை எழுதி முடிப்பதற்குள்ளாகவே 9:20 மணிக்கு மீண்டும் மழை பெய்ய தொடங்கியிருக்கிறது. கவர் மீண்டும் விரிக்கப்பட்டிருக்கிறது. இப்படித்தான் தொடர்ந்து விட்டு விட்டு பெய்து மழை கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருக்கிறது.