தஞ்சாவூர்: ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதன் ரசிகர் ஒருவர் கோவிலில் வித்தியாசமான வேண்டுதல் செய்து தனது உடலை வருத்தி கொண்ட சம்பவம் தஞ்சாவூர் அருகே நடந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு ஐபிஎல் சீசனில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. இதில் லீக் சுற்று முடிவில் பெங்களூர், பஞ்சாப், டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகள் வெளியேறின.
இதையடுத்து பிளேஆப் போட்டிக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதையடுத்து நடந்த பிளேஆப் சுற்று போட்டியில் லக்னோ, மும்பை இந்தியன்ஸ் அணிகள் வெளியேறின.
இதன்மூலம் ஐபிஎல் பைனலுக்கு சென்னை-குஜராத் அணிகள் மோதின. டோனி தலைமையிலான சென்னை அணி இதுவரை 4 முறை சாம்பியன் ஆன நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதேபோல் கடந்த ஆண்டு அறிமுகம் ஆன ஹர்த்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 2வது முறையாக இந்த ஆண்டும் கோப்பையை வெல்ல முயற்சித்து வருகிறது.
இதனால் ஐபிஎல் பைனல் போட்டியை ரசிக்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் தான் யாரும் எதிர்பராத வகையில் போட்டி நடக்கும் குஜராத் அகமதாபாத் மைதானத்தில் மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இரவு 9.40 மணிக்கு போட்டி தொடங்கலாம் என கூறப்படுகிறது. இந்த போட்டியில் சென்னை அணி பெற்ற வேண்டும் என ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.
இந்நிலையில் தான் சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பக்தர் ஒருவர் அலகு குத்தி ஊர்வலமாக வந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள கீழபாலம் முதல்சேத்தி மாரியம்மன் கோயில் திருவிழாவில் சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என வேண்டி பக்தர் ஒருவர் அலகு குத்தி காவடி எடுத்து வந்தார்.
இந்த காவடியின் பின்னால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனியின் போட்டோ ஒட்டப்பட்டு இருந்தது. திருவிழாவில் அலகு குத்தி காவடி ஏந்தி அந்த ரசிகர் ஆட்டமும் போட்டார். இது பார்ப்பபோரை பரவசப்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.