மூச்சு திணறலால் திறந்தேன்… நடுவானில் விமான கதவை திறந்த நபரால் பரபரப்பு

சியோல்,

தென்கொரியாவில் தெற்கு தீவு பகுதியான ஜீஜு நகரில் இருந்து டேகு நகருக்கு ஆசியானா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் ஏ321 என்ற ஏர்பஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்று உள்ளது.

விமானத்தில், போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த தடகள வீரர், வீராங்கனைகள் உள்பட மொத்தம் 194 பயணிகள் இருந்து உள்ளனர். விமானம் டேகு விமான நிலையம் நோக்கி 700 அடி உயரத்தில் பறந்து சென்று கொண்டிருந்தபோது, நடுவானில், 33 வயது நபர் ஒருவர் திடீரென விமான கதவை திறந்து உள்ளார்.

இதில் காற்று விரைவாக விமானத்தின் உள்ளே புகுந்து உள்ளது. இந்த சம்பவத்தில் 12 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளது. எனினும், விமானம் பாதுகாப்பாக தரையில் இறங்கியது.

விமான பாதுகாப்பு ஒழுங்குமுறைகளை மீறியதற்காக அதிகாரிகள் அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவரிடம் நடந்த விசாரணையின்போது, பயணத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டது. அதனால், விமானத்தில் இருந்து விரைவாக வெளியேற விரும்பினேன்.

சமீபத்தில் வேலை இழந்த பின்னர், மனஅழுத்தம் அதிகரித்து விட்டது என போலீசாரிடம் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் அவர் குற்றவாளி என கண்டறியப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட கூடும்.

விமான பயணிகளில் சிலர் சுவாச பாதிப்புகள் போன்ற லேசான பாதிப்புக்காக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதுபற்றி விசாரணையும் நடந்து வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.