புதுச்சேரி: அரசு மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருப்பது புதுச்சேரி அரசுக்கு மிகப்பெரிய இழுக்கு என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டிய நிதியை, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின்போது மக்களுக்கு நிவாரணமாக வழங்கியிருக்கலாம். அதேபோல, அங்கு நிறுவப்படும் செங்கோல் குறித்தும் தவறான தகவலை மத்திய அரசு பரப்பி வருவது சரியல்ல. குடியரசுத் தலைவரை அழைக்காமல் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்படுவதை கண்டித்தே எதிர்க்கட்சிகள் விழாவைப் புறக்கணித்துள்ளன. புதுச்சேரியில் உள்ள கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்த காரணத்தால் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. முதல்வர் ரங்கசாமி தனக்கு வேண்டியவர்களை இந்த மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதை தவிர, அவருக்கு நிர்வாகத்தைப் பற்றி கவலையில்லை.
இது புதுச்சேரி மாநில அரசுக்கு மிகப்பெரிய இழுக்கு. ஒரு அரசு மருத்துவக் கல்லூரியை முறையாக நடத்த முடியவில்லை என்ற கேள்விக்குறியை ரங்கசாமி உருவாக்கி இருக்கிறார். உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்து மாணவர் சேர்க்கைக்கு அங்கீகாரம் பெற போர்க்கால அடிப்படையில் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள பாஜக, பொய்யையே மூலதனமாக வைத்து செயல்பட்டு வருகின்றனர். புதுச்சேரிக்கு மத்திய அரசு சிறப்பு நிதி ரூ.1250 கோடி வழங்கியிருப்பதாக பாஜகவினர் கூறுவதில் உண்மையில்லை. ஜிஎஸ்டி, ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளையே மத்திய அரசு வழங்கியுள்ளது. புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் நியமிக்காமலும், அவர்களுக்கான பயிற்சி அளிக்காமலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை செயல்படுத்துவது சரியல்ல. தமிழை விருப்பப்பாடமாக மட்டுமே அப்பாடத்திட்டத்தில் அறிவித்திருப்பதும் ஏற்புடையதல்ல.
புதுச்சேரி நகராட்சியில் பொலிவுறு நகரத்திட்டங்களை செயல்படுத்த 3 அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டிருந்தது. அதில் இடம் பெற்ற அதிகாரிகளில் 2 பேர் ஒருங்கிணைந்த கட்டப்பாட்டு அறை கட்டுவதற்கான திட்டத்தைச் செயல்படுத்த தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். அவர்களது தவறான செயல்பாடு குறித்து தலைமைச் செயலருக்கு புகார் சென்ற நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை முக்கிய துறைகளில் நியமிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அதையடுத்தே கலால்துறை, நிதித்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலக் கலால் துறை முறைகேடு குறித்து முதல்வர் பதில் அளிக்காமலிருப்பது சரியல்ல. அனைத்துத் துறைகளிலும் முறைகேடுகள் மலிந்துவிட்டன. மாநில அந்தஸ்து கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ரங்கசாமி, நிதி ஆயோக் கூட்டத்தில் அதை பேசவில்லை. ஆகவே, அவருக்கு மாநில அந்தஸ்தில் உண்மையான அக்கறையில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.