ஈரோடு மாநகரின் பிரதான பகுதியில் நட்ட நடு சாலையில் போதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்ணை போலீஸார் படாதபாடுபட்டு மடக்கிப்பிடித்து மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
ஈரோடு மாநகரின் பிரதானப் பகுதியான பன்னீர்செல்வம் பூங்கா அருகே இரவு நேரத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டார் இந்த பெண்.
தன்னுடன் வந்திருந்த முதியவரை தாக்கியது பற்றி அங்கிருந்தவர்கள் விசாரித்த போது அப்பெண் மதுபோதையில் இருப்பது தெரிய வந்தது. அந்த வழியாகச் செல்லும் பேருந்தை வழிமறித்து, ஆபாச அர்ச்சனை நடத்தி ரகளையில் ஈடுபட்டவர், பொதுமக்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கேட்காமல் கெட்ட ஆட்டம் போட்டார்.
இந்த இடத்தில் இருந்த போக்குவரத்து போலீஸார் இப்பெண்ணை அப்புறப்படுத்த எடுத்த முயற்சி தோல்வியடையவே, சட்டம் ஒழுங்கு போலீஸார் மற்றும் ஆயுதப்படை போலீஸாரை வரவழைத்து கை, கால்களை பிடித்து அலேக்காக தூக்கி ஆட்டோவில் ஏற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
அங்கும், அடங்க மறுக்கவே கை கால்களை கட்டி வைத்து மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளிக்க வேண்டிய நிலைக்கு சென்றதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், இப்பெண் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த அங்குலட்சுமி என்பதும் தள்ளுவண்டியில் உணவு பொருள் விற்பவர் என்பதும் தெரிய வந்தது. கணவனை இழந்த நிலையில், தனது தந்தையின் நண்பரோடு சேர்ந்து தள்ளுவண்டி வாங்குவதற்காக கையில் பணத்தோடு வந்தவர், மரப்பாலம் பகுதியில் உள்ள நண்பரை சந்தித்துள்ளார். அங்கு மது குடித்ததில் போதை தலைக்கேறி நடு ரோட்டில் தகராறில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
காலையில் போதை இறங்கியதும் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்ட அங்குலட்சுமியை போலீஸார் அறிவுரை கூறி வழக்குப்பதிவு செய்யாமல் உறவினர்களோடு அனுப்பி வைத்தனர்.