தமிழ்நாடு, புதுச்சேரியுலுள்ள நான்கு அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவை ஒன்றிய அரசின் மருத்துவக் கல்வி வாரியம் உடனடியாக கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தமிழ்நாட்டிலுள்ள சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதன் மருத்துவக்கல்லூரி மற்றும் தருமபுரி மருத்துவக்கல்லூரி மற்றும் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆகிய நான்கு அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை நடப்பாண்டு முதல் ரத்து செய்வதாக இந்திய ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எளிதில் சரிசெய்யக் கூடிய சிறிய குறைகளை காரணம் காட்டி, 1650 மாணவர்களின் மருத்துவர் கனவோடு, மருத்துவக் கல்வி வாரியம் விளையாடுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
நீட் தேர்வின் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவினை சிதைத்த மோடி தலைமையிலான பாஜக அரசு, அடுத்தபடியாக மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வினையும் மருத்துவச்சேவை தலைமை இயக்குநரகமே நடத்தும் என்று அறிவித்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தற்போது மேலும் ஒரு பேரிடியாக 1650 மருத்துவ இடங்கள் உள்ள நான்கு அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்று மருத்துவக் கல்வி வாரியம் மூலம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது அக்கொடுமைகளின் நீட்சியேயாகும். தமிழ்நாட்டு மருத்துவக்கல்லூரி இடங்களைப் பறிக்கும் இத்தகையே தொடர் நடவடிக்கைகள் அனைத்தும் தமிழ் மாணவர்கள் எக்காரணம் கொண்டும் மருத்துவம் பயின்று விடக்கூடாது என்ற பாஜக அரசின் உள்நோக்கமுடையச் செயல்பாடேயாகும்.
மருத்துவக் கல்வி வாரியத்திற்கு உண்மையிலேயே தமிழ்நாட்டு மருத்துவக்கல்லூரிகளில் இருக்கும் உள்கட்டமைப்பு குறைகளைக் களைவதுதான் நோக்கமாக இருக்குமாயின், கடந்த கல்வி ஆண்டிலேயே தொடர்புடைய கல்லூரி நிர்வாகங்களிடம் எச்சரித்து, எளிதாக அவற்றை சரி செய்திருக்க முடியும். அதனைவிடுத்து, மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ள தற்போதைய சூழ்நிலையில் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வோம் என்று அறிவித்திருப்பது, தமிழ்நாடு மற்றும் புதுவையிலுள்ள 1650 மருத்துவக் கல்வி இடங்களை முடக்கும் நோக்கமேயன்றி வேறில்லை.
திடிரென்று அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டால் அங்கு பயின்று வரும் மாணவர்களின் நிலை என்ன? ஏற்கனவே பயின்று பட்டம்பெற்ற மருத்துவர்களின் நிலை என்ன? மருத்துவக் கல்லூரியில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள், கற்பிக்கும் ஆசிரியர்கள் நிலை என்ன? இவற்றில் எதையுமே கருத்திற்கொள்ளாது தமிழ் மாணவர்களின் மருத்துவம் பயிலும் உரிமையைப் பறிக்கும் பாஜக அரசின் மனுதர்ம சூழ்ச்சிகளுக்கு தமிழ்மண் ஒருபோதும் அடிபணியப்போவதில்லை.
ஆகவே, தமிழ்நாடு, புதுச்சேரியுலுள்ள நான்கு அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் முடிவினை இந்திய ஒன்றிய அரசின் மருத்துவக் கல்வி வாரியம் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இல்லையென்றால் இக்கொடுமைகளுக்கு எதிராக தமிழ்நாட்டு மாணவர்கள் கிளர்ந்தெழும் போராட்டத்தை மோடி அரசு எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரிக்கிறேன் என கூறியுள்ளார்.