உரிய சாலை வசதி இல்லாததால் இறந்த ஒன்றரை வயது குழந்தையின் சடலத்தை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு கைகளில் உறவினர்கள் தூக்கிச் சென்ற பரிதாப நிலை வேலூர் மாவட்டத்திலுள்ள மலைக்கிராமத்தில் ஏற்பட்டது.
இறந்த குழந்தையின் சடலத்தை கையில் தூக்கி வைத்துக் கொண்டு நடந்துச் செல்லும் இந்த காட்சி அரங்கேறியிருப்பது வேலூர் மாவட்டம் அத்திமரத்து கொல்லை மலைக்கிராமத்தில் தான்.
விஜி – பிரியா தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தை தனுஷ்கா வீட்டில் இரவில் தூங்கிக்கொண்டிருந்த போது நாகப்பாம்பு தீண்டியதாக கூறப்படுகிறது.
அணைக்கட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிச் சென்ற போதிலும், உரிய சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு செல்லவே நீண்ட நேரமானது. இதனால், பாம்பின் விஷம் உடல் முழுவதும் பரவி வழியிலேயே குழந்தை இறந்தது.
தகவலறிந்த போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடற்கூராய்விற்கு பிறகு குழந்தையின் உடல் அரசு ஆம்புலன்ஸில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மலை அடிவாரத்திலிருந்து கிராமத்திற்குச் செல்ல சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலையில், போதிய சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸை இயக்க முடியாமல் மலை அடிவாரத்திலேயே சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
குழந்தையின் சடலத்தை பார்த்து கதறியழுத உறவினர்கள் அங்கிருந்து சிறிது தூரம் மோட்டார் சைக்கிளிலும், மோட்டார் சைக்கிள் கூட செல்ல முடியாத செங்குத்தான இடத்தில், கைகளில் சடலத்தை தூக்கி வைத்துக் கொண்டு நடந்தும் சென்றனர்.
அல்லேரி மலையில் 4 கிராமங்களில் சுமார் 400 பேர் வசித்து வரும் நிலையில் அடுத்தடுத்துள்ள மலைத் தொடர்களிலும் சிறுசிறு தொகுப்புகளாக மலைக்கிராமங்கள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, மலைக்கிராமங்களிலும் தேவையான அடிப்படை வசதிகளை செய்துத்தர வேண்டுமென தெரிவித்துள்ள கிராம மக்கள், துவங்கியுள்ள சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளனர்.