பொள்ளாச்சி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர் சங்கர் ஆனந்த் என்பவரது இல்லத்தில் 3 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்து இருக்கிறது.
கரூர், கோவை, சென்னை, ஐதராபாத் உட்படதமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையை தொடங்கினர். அதேபோல் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் ஐடி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
அத்துடன் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை தொடங்கிய சோதனை 4 வது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.
தமிழ்நாட்டில் அதிக செல்வாக்கு கொண்ட அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெள்ளிக்கிழமை கரூரில் வருமான வரி சோதனையில் ஈடுபட சென்ற ஐடி அதிகாரிகளின் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகளின் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை சோதனையிட சென்ற பெண் அதிகாரி காயத்ரி, சுனில் குமார், பங்கஜ் குமார், கல்லா சீனிவாச ராவ் ஆகிய 4 வருமான வரித்துறை அதிகாரிகள் காயமடைந்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தங்களை திமுகவினர் தாக்கியதாக காவல் நிலையத்தில் அவர்கள் புகாரளித்து உள்ளனர்.
அதன் பேரில் திமுகவினர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல் திமுகவினர் அளித்த புகாரின்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ஐடி அதிகாரிகளை தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட திமுகவினர் 8 பேரையும் காவல்துறை கைது செய்தது.
இதனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஐடி வரித்துறை அதிகாரிகள் தஞ்சமடைந்தனர். வெள்ளிக்கிழமை இரவு வருமான வரித்துறை அதிகாரிகள் கரூர் துணை மேயர் தாரணி சரவணன் வீட்டுக்கு சீல் வைத்த சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து திமுகவினர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சற்று நேரத்தில் அங்கு மேயர் வந்ததால் சீல் அகற்றப்பட்டது. இருப்பினும் கரூரில் ஐடி அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டன. வருமான வரித்துறை அதிகாரிகளின் புகாரை தொடர்ந்து கரூரில் வருமான வரி சோதனை நடைபெற்ற இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
சிஆர்பிஎப் வீரர்களும் வருமான வரித்துறை சோதனையில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க குவிக்கப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய ஐடி ரெய்டு சில இடங்களில் நிறைவடைந்த நிலையில் 4 நாளாக இரவு பகல் பாராமல் மற்ற இடங்களிலும் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள செந்தில் பாலாஜியின் நண்பரான சங்கர் ஆனந்த் என்பவரது எம் சாண்ட் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்து உள்ளது. நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு தொடர்பான ஆவணங்களை மட்டும் அதிகாரிகள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.