சென்னை: பால் உற்பத்தியாளர்களின் அனைத்து கறவை மாடுகளுக்கும் காப்பீடு வழங்க வேண்டும் என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுறுத்தியுள்ளார்.
பால் உற்பத்தியாளர்களுக்கான சேவையை மேலும் அதிகரிப்பது, அரசின் நலத் திட்டங்களை பால் உற்பத்தியாளர்களிடம் கொண்டு சேர்ப்பது ஆகியவை தொடர்பாக தமிழக பால்வளத் துறை சார்பில் சென்னை தலைமைச் செயலகத்தில் ஆய்வுகூட்டம் நடந்தது. இதில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது:
கறவை மாடுகளின் பால் உற்பத்தி திறனை அதிகரிக்கும் நோக்கில், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் உள்ள காலி நிலங்கள், கூட்டுறவு சங்க அளவில் உள்ள காலி நிலங்கள் மற்றும் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் பசுந்தீவன உற்பத்தியை மேற்கொள்ளவேண்டும். பால் உற்பத்தியாளர்களின் அனைத்து கறவை மாடுகளுக்கும் காப்பீடு வழங்க வேண்டும். கறவை மாடுகளுக்கு தேவையான சரிவிகித கலப்பு தீவனத்தை தடையின்றி வழங்க வேண்டும்.
தற்போது, ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் உள்கட்டமைப்பு வசதிகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி, ஆவினின் தினசரி பால் கையாளும் திறனை70 லட்சம் லிட்டராக உயர்த்தவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சலசலப்புக்கு அஞ்ச வேண்டாம்
இதனிடையே,அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘பொதுவாக ஒரு மாநிலத்தின் பால் உற்பத்தி பகுதியில் இன்னொரு மாநிலத்தின் பால் உற்பத்தி நிறுவனம் தலையிடுவதில்லை. எனவேதான், தமிழகத்தின் பால் உற்பத்தி பகுதியில் வேறு மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்களை அனுமதிக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். எந்தவிதத்திலும் பால் உற்பத்தியாளர்கள் நலன் மற்றும் பொதுமக்களின் நலன் என இரண்டிலும் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை இந்த அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் யாரும் எந்த சலசலப்புக்கும் அஞ்ச வேண்டாம். ஆவின் நிறுவனம் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை உற்பத்தி செலவை கணக்கில்கொண்டு வழங்குவதற்கும், அவர்கள் நலனை பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’ என தெரிவித்துள்ளார்.