நடிகர் விஜய் கடந்த சில ஆண்டுகளாகவே நலத்திட்ட உதவிகள் போன்றவற்றை அவரது ரசிகர்கள் மன்ற நிர்வாகிகள் மூலம் தொடர்ந்து செய்து வருகிறார். ஆடியோ விழாக்களில் மட்டும் அரசியல் பேசி வந்த விஜய் , அவரது மன்றத்தினரை மெல்ல மெல்ல தேர்தல் களத்திலும் இறக்கி ஆழம் பார்த்து வந்தார். இப்போது முழுவதுமாக அரசியல் களத்தில் குதிக்க முடிவெடுத்து விட்ட அவர், முதற்கட்டமாக மக்கள் நலப் பணிகளை செய்யுமாறு மன்றத்தினரை முடுக்கிவிட்டு இருக்கிறார். அடுத்து அம்பேத்கர், தீரன் சின்னமலை உள்ளிட்டோருக்கு மரியாதை செலுத்துமாறு மன்றத்தின் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
உலக பட்டினி தினத்தையொட்டி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அரசியலில் கால் பதிக்கும் முனைப்பில், பல்வேறு செயல்களில் ஈடுபட்டுவரும் நடிகர் விஜய் வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.
அதற்கு முன்பாக சென்னை, மதுரவாயலில் உள்ள தனியார் மண்டபத்தில் வரும் ஜூன் 3ம் தேதி 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்திக்க உள்ளார். தொகுதிக்கு 6 மாணவர்கள், 2 பெற்றோர்கள் என 234 தொகுதிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட சுமார் 6,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.