தமிழகத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளான நிலையில், பல்வேறு பகுதிகளில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது. இந்நிலையில் வாட்டி வதைத்துவந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதற்குப் பிறகாவது வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இதையடுத்து நேற்று தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரை, கடலூர், ஈரோடு உள்ளிட்ட 13 இடங்களில் வெயில் சதமடித்தது. மேலும் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.