ஜெய்ப்பூர்:
மூதாட்டியை துரத்திச் சென்று அவரை உயிருடனே கடித்து குதறி சாப்பிட்ட இளைஞரை ராஜஸ்தான் போலீஸார் கைது செய்துள்ளனர். அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்தில் உள்ள சாராதனா கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தி தேவி (65). ஆடுகளை வளர்க்கும் தொழிலை செய்து வந்தார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில், அவர்களுக்கு திருமணமாகி அந்தப் பகுதியிலேயே தனியாக வசித்து வருகின்றனர். இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 2 மணியளவில் வழக்கம் போல தனது ஆட்டுக் கொட்டகைக்கு மூதாட்டி சாந்தி தேவி சென்றுள்ளார்.
அப்போது திடீரென அங்கு ஓடி வந்த இளைஞர், சாந்தி தேவியின் மீது பாய்ந்து நகங்களால் பிராண்டியுள்ளான். இதனால் பயந்து போன சாந்தி தேவி அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக அங்குமிங்கும் ஓடியுள்ளார். ஆனால், அவரை விடாமல் துரத்திய அந்த இளைஞர், சாந்தி தேவியை பிடித்து கீழே தள்ளி அங்கிருந்த கல்லால் அவரது முகத்தில் வெறித்தனமாக தாக்கினான். இந்த மூர்க்கத்தனமாக தாக்குதலால் அங்கிருந்து அவரால் நகர முடியாமல் போனது.
கடித்து தின்ற கொடூரம்:
அதற்கு பிறகு நடந்ததுதான் கொடூரத்தின் உச்சமே. கீழே வலியால் துடித்துக் கொண்டிருந்த அந்த மூதாட்டியின் ரத்தத்தை நாக்கால் வருடி ருசித்த அந்த இளைஞன், அப்படியே அவரது உடல் சதைகளை பற்களால் கடித்து குதறி சாப்பிட தொடங்கினான். இதில் வலியால் துடித்த மூதாட்டியின் மரண ஓலத்தை அங்கு சென்ற ஒருவருக்கு கேட்க, அவர் அங்கு சென்ற போது அந்தக் கொடூர காட்சியை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தார். அவரை பார்த்த அந்த இளைஞர் அவரையும் துரத்தி வர, உயிரை கையில் பிடித்துக் கொண்டு அங்கிருந்து அந்த நபர் ஓடி தப்பினார்.
மடக்கி பிடித்த பொதுமக்கள்:
பின்னர் ஊருக்கு சென்ற அவர் தான் பார்த்த விஷயத்தை மக்களிடம் கூற, நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு வந்தனர். மக்கள் கூட்டத்தை பார்த்தும் மூதாட்டியின் உடலை சாப்பிட்டுக் கொண்டிருந்த இளைஞன் அங்கிருந்து ஓட தொடங்கினான். அப்போது அவனை விரட்டிச் சென்று பொதுமக்கள் பிடித்தனர். அவர்களையும் அவன் கடிக்க முற்பட்டதால், அவனது கை, கால்களை கட்டி போலீஸில் ஒப்படைத்தனர். இதையடுத்து, மூதாட்டியை கொலை செய்ததாக அந்த இளைஞனை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், அவன் மும்பையை சேர்ந்த சுரேந்தி தாக்குர் (22) என்பது தெரியவந்தது.
ரேபிஸ் நோயின் உச்சம்:
அவன் மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதை போன்று நடந்து கொள்வதை பார்த்த போலீஸார், அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில்தான் திடுக்கிடும் தகவல் வெளியானது. அந்த இளைஞர் தண்ணீரை கண்டு பயப்படும் ஹைட்ரோஃபோபியா (Hydrophobia) என்ற பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதும், நாய் கடித்தால் வரும் ரேபிஸ் நோயின் இறுதிக்கட்டம் இது என்பது தெரியவந்தது. சில வாரங்களுக்கு முன்பு சுரேந்திர தாக்குரை நாய் கடித்துள்ளது. ஆனால் அதற்கு அவர் முறையான சிகிச்சை எடுத்துக்கொள்ளாததால் அவருக்கு ரேபிஸ் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெறி பிடித்துவிட்டது:
ரேபிஸ் பாதிப்பு உச்சத்தை அடைந்தால் மனிதனுக்கு நாய் போல வெறி பிடித்துவிடும் என்றும், அதன் முதல் அறிகுறியே இந்த ஹைட்ரோஃபோபியா தான் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், ஒருவருக்கு இந்த அறிகுறி தென்பட்டுவிட்டால் அவரை உலகில் எங்கு கொண்டு சென்றாலும் காப்பாற்ற முடியாது எனக் கூறப்படுகிறது. இதனால்தான் சுரேந்திர தாக்குருக்கு நாய் போல வெறிபிடித்து சாந்தி தேவியை கடித்து தின்றுள்ளார். சுரேந்திர தாக்குரும் இன்னும் ஒரு வாரத்தில் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் கூறினார். இதையடுத்து, அவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற போலீஸார் அனுமதித்தனர்.