சென்னை: Vijay (விஜய்) விஜய் ஓகே சொன்ன கதையில் அர்ஜுன் நடித்து அந்தப் படம் சூப்பர் ஹிட்டானதாக இயக்குநர் சுராஜ் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் அதிகம் வசூல் செய்யும் நடிகர்களில் ஒருவராக விஜய் திகழ்ந்துவருகிறார். தந்தையின் துணை இருந்ததால் சினிமாவுக்குள் நுழைவது வேண்டுமானால் அவருக்கு எளிதாக இருந்தது. ஆனால் அதன் பிறகு அவர் சந்தித்த கேலிகளும், கிண்டல்களும் அளவுக்கு அதிகமானவை. குறிப்பாக தன்னுடைய கரியர் ஆரம்பத்தில் ரொம்பவே உருவ கேலியை பார்த்த நடிகர்களில் விஜய்யும் ஒருவர். இருப்பினும் அது அத்தனையையும் தனது திறமையை கொண்டு சமாளித்தார்.
கமர்ஷியல் கிங் விஜய்:
குடும்ப ரசிகர்களை கவர்வதற்காக ஆரம்பத்தில் ஃபேமிலி சப்ஜெக்ட்டை குறி வைத்துவந்த விஜய் ஒரு கட்டத்துக்கு மேல் கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்தார். ஆக்ஷன், நடனம், எமோஷனல், காமெடி என எதை கொடுத்தாலும் அதில் தனது அடையாளத்தை லாவகமாக பதித்துவந்ததால் கமர்ஷியல் கிங்காக உயர்ந்தார் விஜய். இதன் காரணமாக அவருக்கு ரசிகர்களும் அதிக அளவு பெருகி இளைய தளபதியிலிருந்து தளபதி இடத்துக்கு உயர்ந்திருக்கிறார்.
ரஜினிக்கு அப்புறம் விஜய்தான்:
பொதுவாக ஒரு ஹீரோ என்றால் அவர்களுக்கு காமெடி சென்ஸ் கம்மியாகத்தான் இருக்கும். குறிப்பாக அவர்கள் காமெடி செய்தால் சிரிப்பு வராது ஏன் அவர்களுக்கு சிரிப்பு வரவைக்கக்கூடிய முக பாவனைகளே வராது என்று பலர் கூறுவார்கள். அதை முதலில் உடைத்தெறிந்தது ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அவரது காமெடி சென்ஸும், காமெடி காட்சிகளில் நடிப்பும் அருமையாக இருக்கும். அதேபோல் விஜய்யும் காமெடி காட்சிகளில் தனது நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்தவர்.
மருதமலை:
அப்படி அவர் நடித்த பல காமெடி காட்சிகள் ஹிட்டாகியிருக்கின்றன. இந்தச் சூழலில் சுராஜ் இயக்கத்தில் வெளியான மருதமலை படத்தில் விஜய்தான் நடித்திருக்க வேண்டியது என்ற தகவல் தெரியவந்திருக்கிறது. அதாவது, சுராஜின் இயக்கத்தில் அர்ஜுன், வடிவேலு ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் மருதமலை. இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக காமெடி காட்சிகள் எல்லாம் குபீர் ரகம்.
விஜய்க்கு சொன்ன கதை:
மருதமலை கதையை முதலில் விஜய்யிடம்தான் சுராஜ் கூறியிருக்கிறார். கதையை கேட்ட விஜய்க்கும் பிடித்துப்போக படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அந்த சமயத்தில் வேறு ஒரு படத்துக்கு கொடுத்த டேட்டும், இந்தப் படத்துகாக ஒதுக்கப்பட வேண்டிய டேட்டுகளும் முட்டிக்கொண்டதால் படத்திலிருந்து விஜய் விலகியிருக்கிறார். இந்தத் தகவலை இயக்குநர் சுராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
சுராஜின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்:
சுராஜ் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர். அவர் இயக்கிய தலைநகரம் படம் மெகா ஹிட்டானது. அதேபோல் தனுஷை வைத்து இயக்கிய படிக்காதவன், அர்ஜுனை வைத்து இயக்கிய மருதமலை உள்ளிட்ட படங்களும் ஹிட்தான். அவரது படங்களில் எப்போதும் காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடைசியாக வடிவேலுவை வைத்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தை இயக்கினார். அப்படம் தோல்வி படமாக அமைந்தது.