சென்னை: நடிகை மீனா சினிமாவில் அறிமுகமாகி 40 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார்.
குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய மீனா, 90களில் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.
சமீபத்தில் மீனாவின் 40 வருட திரையுலக பயணத்தை பாராட்டி ‘மீனா 40’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்நிலையில் மீனா தனது சினிமா அனுபவத்தின் சில ரகசியங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
மீனாவை சமாதானப்படுத்திய இயக்குநர்
திரையுலகில் நடிகையாக 40 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார் மீனா. குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய மீனா, 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பிரபு என 90ஸ் ஹீரோஸ் முதல் அஜித் வரை ஜோடியாக நடித்துள்ளார்.
மீனாவின் கண்ணழகில் மயங்கிய ரசிகர்கள், அவரை கண்ணழகி மீனா என்றே அழைத்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் தனது கணவரை இழந்த மீனா, தற்போது மெல்ல மெல்ல அந்த துயரத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். இந்நிலையில் மீனாவின் சாதனையை பாராட்டி ‘மீனா 40’ என்ற நிகழ்ச்சியை பிகைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனல் நடத்தியது. அதில் சூப்பர் ஸ்டார் ரஜினி, ராஜ்கிரண், போனிகபூர், பிரபுதேவா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று இருந்தனர்.
இந்நிலையில், குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நடிகையாக மாறியத் தருணத்தில் நடந்த அனுபவங்களை மீனா பகிர்ந்துள்ளார். அதில், என் ராசாவின் மனசிலே, எஜமான், நாட்டாமை போன்ற படங்கள் குறித்தும் மனம் திறந்துள்ளார். தமிழில் மீனா நாயகியாக நடித்த முதல் திரைப்படம் என் ராசாவின் மனசிலே. அதில் ராஜ்கிரண் தான் ஹீரோவாக நடிக்கிறார் என்பது தெரியாமலேயே கமிட்டாகியுள்ளார் மீனா.
அதனால் என் ராசாவின் மனசிலே படத்தின் படப்பிடிப்பில் முதன்முறையாக ராஜ்கிரணை பார்த்த மீனா, இவருக்கு ஜோடியாக நடிக்கப் போகிறோமா என நினைத்து பயந்துள்ளார். மேலும், ராஜ்கிரண் தான் ஹீரோ எனத் தெரியாமல் எப்படி இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என மனதுக்குள் நினைத்துக்கொண்டாராம். அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் எஜமான் படத்தில் நடித்தது குறித்தும் பேசியுள்ளார்.
அதில், எஜமான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் போதும் தனக்கு வயது ரொம்பவே குறைவு தான். மனதளவில் 14, 15 வயது பெண்ணாகவே இருந்ததால் ரஜினி அதிகமாக பேசவில்லை. எந்த காட்சிக்கு எப்படி நடிக்கணும் என எதுவுமே சொல்லாமல் அமைதியாகவே இருப்பார். மேலும், ஒரு காட்சியில் நடித்து முடித்த பின்னர் தான் அதில் இருந்த தவறுகளை சுட்டிக் காட்டுவார். சின்ன வயதாக இருந்தாலும் எஜமான் படத்தில் தனது கேரக்டரை புரிந்து நடித்தேன், அதுதான் உண்மையான நடிப்பு என்றுள்ளார்.
முக்கியமாக நாட்டாமை படத்தில் நடித்த அனுபவம் பற்றியும் மீனா மனம் திறந்துள்ளார். மீனா ரொம்பவே பிஸியாக இருந்த நேரத்தில் கேஎஸ் ரவிக்குமார் நாட்டாமை படத்திற்காக மீனாவிடம் கால்ஷீட் கேட்டுள்ளார். இந்த கதையில் தனக்கு எப்படி ஸ்பேஸ் இருக்கும் என யோசித்த மீனா, முதலில் வேண்டாம் என சொல்லிவிட்டாராம். ஆனால் கேஸ் ரவிகுமார் தான் அவர் என்னை சமாதானப்படுத்தி நடிக்க வைத்துள்ளாராம். அப்போது ஒருநாள் ‘மீனா பொண்ணு’ பாடலை போட்டுக் காட்டியுள்ளார் மீனா. அதனைக் கேட்ட மீனா, என்னோட பெயரில் பாடலா என ஆச்சரியப்பட்டுள்ளார்.