தமிழ்நாடு அரசில் ‘பவர் புல்’ அமைச்சராக வலம் வந்து கொண்டிருப்பவர் செந்தில் பாலாஜி. திமுகவுக்குள் ரீ எண்ட்ரி கொடுத்த மிகக் குறுகிய காலத்திலேயே கட்சியில் வலுவான இடத்தை தனக்கனெ பிடித்தார். எந்த இடத்தில் விட்டாலும் அதன் தலைமைக்கு நெருக்கமாக வந்துவிடும் செந்தில் பாலாஜிக்கு முதல்வர் குடும்பத்துக்குள்ளும் சீக்கிரமே நல்ல பெயர் கிடைத்துவிட்டது. இதனாலே பசையுள்ள துறையான மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அவருக்கு கிடைத்தது.
செந்தில் பாலாஜி, பிடிஆர் – செம ஒற்றுமை!சீனியர்கள் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த துறையை செந்தில் பாலாஜி மிக லாவகமாக தட்டிச் சென்றார். இதனால் சீனியர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே செந்தில் பாலாஜி மீது ஒரு அதிருப்தி அலை படரத் தொடங்கியது. பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் சில சீனியர்களுக்கும் ஒத்துவராது என்பது வெளிப்படையாகவே தெரிந்த சேதி தான். தமிழக அமைச்சரவையில் இந்த இரு அமைச்சர்களை மட்டும் தான் பாஜகவும் ஆரம்பத்தில் இருந்தே கிடைக்கும் சமயத்தில் எல்லாம் எதிர்த்து வந்தது.
வருமான வரித்துறை வைத்த செக்!இதில் பிடிஆர் சமீபத்தில் ஆடியோ சர்ச்சை மூலம் சிக்கி தனது துறையை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை களமிறங்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறிவந்த நிலையில் வருமான வரித்துறை செந்தில் பாலாஜியை குறிவைத்து சோதனையில் இறங்கியுள்ளது. அவரை மட்டும் விட்டுவிட்டு, அவரது சகோதரர், அவருக்கு நெருக்கமானவர்கள், அங்காளி, பங்காளி என அத்தனை பேரையும் வளைத்து செந்தில் பாலாஜி எந்த பக்கமும் நகர முடியாமல் செக் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஸ்டாலின் கொடுக்கும் ஷாக் ட்ரீட்மெண்ட்!செந்தில் பாலாஜிக்கு எதிராக மிகப் பெரிய ஆதாரங்களை கைப்பற்றும் முயற்சியில் தேவையானவை கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜிக்கு எதிராக வலுவான புகார்கள் எழுந்தால் அது தனது ஆட்சிக்கு கெட்டப் பெயர் என ஸ்டாலின் கருதுகிறாராம். தனது ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகளே எழக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ஸ்டாலின் இந்த முறை செந்தில் பாலாஜிக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்க தயாராகிவிட்டதாக சொல்கிறார்கள்.
செந்தில் பாலாஜி சாதுர்யம்!அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில், “செந்தில் பாலாஜி சாதுரியமாக தனக்கும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் ஏற்பட்ட மோதலை, திமுகவிற்கும் வருமான வரித்துறைக்கும் என்று மாற்றிவிட்டார். இதை உணராத மு.க.ஸ்டாலின் அவர்களும் ‘PTR -இன் விஷயத்தில் அது அவர் தனிப்பட்ட விவகாரம் அவர் பார்த்துக்கொள்வார்’ என்று ஒதுங்கிக்கொண்டு செந்தில் பாலாஜி விஷயத்தில் மட்டும் தேவைக்கு அதிகமாக அவரை ஆதரித்து அனைத்து திமுகவினருக்கும் பிரச்சனையை தேடிக்கொண்டார்” என்று தெரிவித்திருந்தார்.
செந்தில் பாலாஜி இலாக்கா மாற்றம்?கை கழுவ தயாராகிறாரா ஸ்டாலின்?கே.சி.பழனிசாமி மேலே உள்ள பதிவை வெளியிட்ட அடுத்த ஒரு மணி நேரத்தில் செந்தில் பாலாஜி இலாகா மாற்றம் செய்யப்படுவதாக தகவல் சுற்றுகிறது என்று மற்றொரு தகவலை அதே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால் பிடிஆரை தொடர்ந்து செந்தில் பாலாஜி விவகாரத்திலும் இலாக்காவை மாற்ற ஸ்டாலின் திட்டமிட்டுவிட்டதாக கோட்டை வட்டாரங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன. அதே சமயம் பாஜக குறி வைத்த இரு அமைச்சர்களும் அடுத்தடுத்து சிக்கலில் சிக்கி வரும் நிலையில் அடுத்து எந்த அமைச்சர் சிக்குவார் என்ற பேச்சு திமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது.