துருக்கியில், அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் தயீப் எர்டோகன் வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளார்.
மே-14 அன்று நடைபெற்ற முதல் சுற்றுத் தேர்தலில், அந்நாட்டு சட்டப்படி போட்டியிட்ட வேட்பாளர்கள் யாருமே 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், நேற்று மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் 69 வயதான அதிபர் தயீப் எர்டோகன் 52.14 சதவீத வாக்குகளை பெற்றதாவும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கெமால் கிலிக்டரொலு 47.86 % வாக்குகளை பெற்றதாகவும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இஸ்தான்புலில், திரண்டிருந்த தமது ஆதரவாளர்கள் மத்தியில், பரப்புரை வாகனத்தின் மீதேறி நின்று, உரையாற்றிய அதிபர் எர்டோகன் வெற்றியை உறுதி செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.