ஒட்டுமொத்த நாடும் பெரிதும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் அரசியல் நிகழ்வு 2024 மக்களவை தேர்தல். இதற்கு முன்னோட்டமாக 10 மாநிலங்களில் நடப்பாண்டு சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இருப்பினும் மக்களவை தேர்தலுக்கான களம் என்பது முற்றிலும் மாறுபட்டது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இந்த சூழலில் தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறாத கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
எதிர்க்கட்சிகள் சந்திப்பு
ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ், அரவிந்த் கெஜ்ரிவால், நிதிஷ் குமார் எனப் பலரும் தனி ரூட்டில் தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஆனால் எதிர்க்கட்சிகளின் பிளவு பாஜகவிற்கே சாதகமாக முடியும். எனவே சிதறி கிடக்கும் எதிர்க்கட்சிகளை யார் ஒன்றிணைப்பது என்ற பெரிய கேள்வி முன்வந்து நிற்கிறது. சமீபத்தில் கர்நாடகாவில்
காங்கிரஸ்
பெற்ற வெற்றி, பாஜகவை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை பல கட்சிகளிடம் விதைத்துள்ளது.
காங்கிரஸ் செல்வாக்கு
அதேசமயம் காங்கிரஸின் செல்வாக்கும் கூடியிருக்கிறது. இந்த சூழலில் மாநில கட்சிகள் வலிமையாக இருக்கும் இடங்களில் காங்கிரஸ் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன்மூலம் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய ஓர் அற்புதமான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
பாட்னாவில் சந்திப்பு
இந்நிலையில் தான் வரும் ஜூன் 12ஆம் தேதி பிகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஆண்டு பாஜகவை வெளியேற்றி விட்டு ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து பிகாரில் புதிய கூட்டணி ஆட்சி அமைந்தது.
யாரெல்லாம் பங்கேற்பு
இதற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தலைவர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். தற்போது பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளோம். கூடிய விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ்,
திமுக
, ஆம் ஆத்மி, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே), ஜே.எம்.எம், சமாஜ்வாதி, ராஷ்டிரிய லோக் தள், இந்திய தேசிய லோக் தள், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, சிபிஐ, சிபிஎம், சிபிஐ – எம்.எல் உள்ளிட்ட 16 கட்சிகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முடிவுகள் எப்படி இருக்கும்
இதற்காக நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தங்களுடைய தொடர்புகள் மூலம் தேசிய அளவில் காய் நகர்த்தியுள்ளனர். இவர்கள் எடுத்த நடவடிக்கையின் விளைவாக ஜூன் 12ஆம் தேதி தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. மனக் கசப்புகளை மறந்து எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடுவதே ஆரோக்கியமான விஷயம்.
இதற்கான பலன் நிச்சயம் கிடைக்காமல் போகாது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மத்தியில் ஒருமித்த முடிவு எட்டப்படுமா? பாஜகவை வீழ்த்த மெகா வியூகம் அமைப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.