“என்னிடம் ரூ.25 லட்சம் லஞ்சம் வாங்கிவிட்டு, ஏமாற்றினார் செந்தில் பாலாஜி!" – தமிழ்மகன் உசேன் காட்டம்

கள்ளச்சாராய மரணங்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து தி.மு.க அரசைக் கண்டித்து, அ.தி.மு.க சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில், நாகர்கோவிலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அந்தக் கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மீண்டும் தமிழகத்தின் முதல்வராக எடப்பாடியார் வர வேண்டும் என்பதை சூழுரையாக எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது. கள்ளச்சாராயத்தைத் தடைசெய்ய முடியாத தி.மு.க-வின் மு.க.ஸ்டாலின் விடியா அரசை, வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்காக விரைவில் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும் என்பதை எதிர்பார்ப்போம். கடந்த வாரம் மரியாதைக்குரிய ஆளுநரை எடப்பாடி அவர்கள் தலைமையில் சந்தித்தோம். நாங்கள் சில விளக்கங்களைச் சொன்னோம். `நான் இதைப் பரிசீலிக்கிறேன். நானும் இந்தச் சம்பவங்கள் குறித்தெல்லாம் கேள்விப்பட்டேன்’ எனக் கூறினார்.

தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கொலை கொள்ளைகளையெல்லாம் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். 5 வயது குழந்தையைக் கடத்திக்கொண்டுபோய் சிறார் வதை செய்து கொலைசெய்த மாபாவிகள் கூட்டம் தமிழ்நாட்டில் உலவிக்கொண்டிருப்பதை மு.க.ஸ்டாலின் அரசு இதுவரை எண்ணிப்பார்க்கவில்லை.

அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கள்ளச்சாராயத்தால் பலர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டார்கள். கள்ளச்சாராயம் காய்ச்சிய நபரை ஆஸ்பத்திரியில் பார்த்து நம்முடைய பணத்தில் 50,000 ரூபாயை நிதியாகக் கொடுத்த கொடுமைக்காரர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் சிங்கப்பூரில் முதலீட்டாளர்களைப் பார்க்கப் போயிருந்ததாகச் சொன்னார்கள். முதலீடுகளை தமிழ்நாட்டுக்குக் கொண்டுவர அவர் செல்லவில்லை. தன் கைவசமுள்ள முதலீட்டை சிங்கப்பூரில் வழங்குவதற்காகச் சென்றிருக்கிறார். அவரை இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கண்டிக்கிறோம். கள்ளச்சாராய பேரல்களை விஷச்சாராயம் என மாற்றியிருக்கின்றனர். கிராம நிர்வாக அதிகாரி, போலீஸ்காரர், நகராட்சி ஊழியர் ஆகியோர் தி.மு.க-வினரால் தாக்கப்படுகிறார்கள். எனவே விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

நம்முடைய இயக்கத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவர் இருக்கிறார். செந்தில் பாலாஜி என பெயர் அவருக்கு. போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது ஒரு ஆர்.டி.ஓ பணியிட மாற்றத்துக்கு என்னிடத்தில் 25 லட்சம் ரூபாயை வாங்கிக்கொண்டு ஏமாற்றியவர்தான் இந்த செந்தில் பாலாஜி. இன்றுவரை அந்தப் பணத்தை அவர் தரவில்லை. அந்த செந்தில் பாலாஜியின் நிலைமை என்னவென்று இப்போது நீங்கள் பார்க்கிறீர்கள். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக இன்றைய தினம் அதிகாரிகள் சென்றால், அதிகாரிகளைத் தாக்குகிறது செந்தில் பாலாஜியின் கூட்டம். டாஸ்மாக்கில் குவாட்டர் கேட்டால் 10 ரூபாய் அதிகமாகக் கேட்கிறார்கள், ஆஃப் கேட்டால் 20 ரூபாய் அதிகமாகக் கேட்கிறார்கள். ஏன் என்று கேட்டால், `செந்தில் பாலாஜிக்குக் கொடுக்கணும்’ என்கிறார்கள். டாஸ்மாக் கடையை செந்தில் பாலாஜி வைத்திருக்கிறாரா?

தமிழ்மகன் உசேன்

எண்ணூறுக்கு மேல் அனுமதி இல்லாத டாஸ்மாக் பார்களை திறந்து வைத்திருக்கிறார்கள். எனவே கள்ளச்சாராயத்தை ஒழிக்க மறந்த விடியா அரசை வீட்டுக்கு அனுப்ப இப்படிப்பட்ட போராட்டங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். கள்ளச்சாராயம் மட்டுமல்ல போதைப்பொருள் அனைத்தையும் பகிரங்கமாக விற்பனை செய்கிறது மு.க.ஸ்டாலினின் பொம்மை ஆட்சி” என்றார்.

Loading…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.