சென்னை: ட்விட்டரில் பதிவு செய்யப்படும் புகார்களுக்கு சென்னை காவல் துறை மின்னல் வேகத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும், சென்னை மாநகராட்சி ஆமை வேகத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் பொதுமக்களிடம் 1913 தொலைபேசி எண், நம்ம சென்னை செயலி, தபால்கள் வாயிலாக புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் பார்வையாளர்கள் நேரம் ஒதுக்கப்பட்டு, பொதுமக்களிடம் மேயர் முதல் அதிகாரிகள் வரை மனுக்களை பெறுகின்றனர். ஆனால். தற்போது பொதுமக்கள் அதிக அளவு சமூக வலைதளங்கள் மூலம் புகார்களை பதிவு செய்து வருகின்றனர்.
குறிப்பாக, ஒருவர் போகும் வழியில் ஏதாவது குறைகளை பார்த்தால் உடனடியாக புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவு செய்து விடுகின்றனர். இவ்வாறு பல்வேறு துறைகளான சென்னை மாநகராட்சி, மின்சாரத் துறை, குடிநீர் வாரியம், காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ட்விட்டர் கணக்குகள் மூலம் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வருகிறது.
இதில் மின்சார வாரியம், காவல் துறை உள்ளிட்ட துறைகளில் பொதுமக்களின் புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஆனால், சென்னை மாநகராட்சி இது போன்து சமூக வலைதளங்கள் மூலம் வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது இல்லை என்று புகார்கள் எழுந்துகொண்டே உள்ளது.
சென்னை காவல் துறை கடந்த 5 மாதங்களில் ட்விட்டர் மூலம் வந்த 5,010 புகார்களில் 97.8% புகார்களுக்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இதுபோன்று மின்சார வாரியம் மற்றும் குடிநீர் வாரியமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து கொண்டுள்ளது. ஆனால், சென்னை மாநகராட்சி இந்தப் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது இல்லை புகார் கூறப்படுகிறது.
இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “ட்விட்டர் மூலம் வரும் புகார்களுக்கு சென்னை மாநகராட்சி ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பதில் அளித்து வருகிறது. சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்படும் புகார்களுக்கு உடனடியாக புகார் எண் அளிக்கப்படுகிறது. புகார் எண் அளித்த உடன் அந்தப் புகார் தொடர்புடைய மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த மண்டல அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் இந்தப் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள்.
ஆனால், இந்தத் தகவலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய காலதாமதம் ஏற்படுகிறது. ஒரு சில பொறியாளர்கள் கால தாமதம் செய்கிறார்கள். இதன் காரணமாக தான் நடவடிக்கை எடுத்த விவரங்களை பதிவு செய்ய கால தாமதம் ஏற்படுகிறது. அதற்கு இடைப்பட காலத்தில், புகார் மீது எடுத்த நடவடிக்கையை இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்” என்று அவர் கூறினார்