‘குலுகுலு’வுக்குப் பிறகு மீண்டும் காமெடி கதைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் சந்தானம். இப்போதும் கைவசம் அரை டஜன் படங்கள் வைத்திருக்கிறார். சந்தானத்தைப் பொறுத்தவரைப் புதுமுக இயக்குநர்களிடம் விரும்பி கதை கேட்பார். அதிலும் அவரது கதை விவாதக் குழுவில் இருக்கும் ஒவ்வொருவரையுமே ‘ஸ்கெட்ச் போட்டுத் தூக்குவது போல’ ஒவ்வொருவரையும் இயக்குநராக்கி அழகு பார்ப்பார்.
காமெடி கதைகள் கேட்பதில் அதிக விருப்பம் அவருக்கு. சிரித்து ரசித்துக் கேட்பார். முழுக்கதையும் முடிந்த பிறகு, ‘பண்றேன்… பண்ணலை’ என ரிசல்டையும் சொல்லிவிடுவார். தவிர ‘லுக்’ விஷயத்திலும் அக்கறை எடுத்துக் கொள்வார். ‘எந்த லுக் போட்டாலும் சரி, நான்தான் அந்த லுக்ல இருக்கேன்னு ஆடியன்ஸுக்குப் புரியணும்’ என்பார். சரி, சந்தானத்தின் அடுத்தடுத்த படங்கள் என்னென்ன?
தனது லைன் அப்களை க்ளியர் கட் ஆகத் திட்டமிட்டு வைத்திருக்கிறார் சந்தானம். `டிடி ரிட்டர்ன்ஸ்’, `கிக்’, `வடக்குப்பட்டி ராமசாமி’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் ஏற்கெனவே முடிவடைந்துவிட்டன.
‘சபாபதி’ படத்தைத் தயாரித்த ரமேஷ்குமார் அடுத்துத் தயாரித்திருக்கும் படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’, ‘லொள்ளு சபா’ ராம்பாலாவின் உதவியாளர் எஸ்.பிரேம் ஆனந்த் இயக்குகிறார். சந்தானத்துக்கு மாஸ் ஹிட் கொடுத்த ‘தில்லுக்கு துட்டு’ பாணியில், குருவின் வழியில் இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார் பிரேம். சந்தானத்தின் ஜோடியாக சுரபி நடித்திருக்கிறார். இவர்கள் தவிர ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர், ஃபெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனிஷ்காந்த், தீனா, தங்கதுரை, தீபா, மானஸி எனத் துணை நடிகர்களின் பட்டியல் நீள்கிறது.
அடுத்து நடித்து முடித்திருக்கும் படம் ‘கிக்’. கன்னடத்தில் ‘லவ் குரு’, ‘கானா பஜானா’, ‘விசில்’, ‘ஆரஞ்ச்’ போன்ற படங்களை இயக்கிய பிரசாந்த் ராஜ், தமிழுக்கு வருகிறார். சந்தானத்தின் ஜோடியாக, ‘தாராள பிரபு’ படத்தில் நடித்த தான்யா ஹோப் நடிக்கிறார். சென்னை, பாங்காக் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தை அடுத்து இதுவும் வெளியாகிறது.
சந்தானம் இரட்டை வேடத்தில் நடித்த ‘டிக்கிலோனா’ படத்தை இயக்கிய கார்த்திக் யோகி அடுத்து இயக்கியிருக்கும் படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக இது இருக்கும். மேகா ஆகாஷ் கதாநாயகி. திண்டுக்கல் பகுதிகளில் ஒரே கட்டமாக முழு படப்பிடிப்பும் நடந்து முடிந்திருக்கிறது.
அடுத்து லைன் அப்பில், அன்புச்செழியன் தயாரிப்பில் ‘இந்தியா பாகிஸ்தான்’ இயக்குநர் என்.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தற்போது இரண்டு ஷெட்யூல் வரை படப்பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. அடுத்த மாதம் மீண்டும் அதன் படப்பிடிப்பு ஆரம்பிக்கிறது.
இதற்கிடையே லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்க கமிட் ஆன படத்திலும் சந்தானம் கமிட் ஆகியிருந்தார். அதன் பின்னர் விக்னேஷ் சிவன் அதிலிருந்து விலகினார். ஆனாலும் சந்தானத்தின் கால்ஷீட்டை வீணாக்க விரும்பாத லைகா, சந்தானத்தை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கிறது. இயக்குநர், நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இது தவிர, அறிமுக இயக்குநர் ஒருவரின் படத்திலும் சந்தானம் நடிக்கிறார்.
இந்த லிஸ்ட்டில் `டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தை அடுத்த மாதம் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டு வருகின்றனர். அதன் பின்னரே `வடக்குப்பட்டி ராமசாமி’, `கிக்’ படங்களின் ரிலீஸ் இருக்கும் என்கிறார்கள்.