கடலில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைப்பது ஏன்? விகடனின் `Doubt of common man’ பக்கத்தில், “புயல்களுக்குப் பெயர் வைக்கும் நடைமுறை எப்போது தொடங்கியது, பெயர் வைப்பது யார், எப்படி பெயர் வைக்கப்படுகிறது?” என்ற கேள்வியை முகுந்தன் என்ற வாசகர் கேட்டிருந்தார். அதற்கான பதில்..!
கடலில் உருவாகி, கரை நோக்கி வரும் புயலுக்குப் பெயர் வைத்து அழைக்கும் வழக்கம் உலகம் முழுவதும் இருக்கிறது. புயல் குறித்த செய்திகள் ஊடகங்களில் வரும்போதெல்லாம், ‘புயலுக்குப் பெயர் வைக்கும் வழக்கம் எப்படித் தோன்றியது? புயலுக்கு ஏன் பெயர் வைக்க வேண்டும்? புயலுக்கு யார் பெயர் வைக்கிறார்கள்?’ என்பது போன்ற பல கேள்விகள் நமக்குள்ளும் உருவாகிவிடுகின்றன.
முதலில் புயல் என்றால் என்னவென்று பார்க்கலாம்!
கடற்பரப்பில் 26 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமான வெப்பநிலை தொடரும் போது காற்று வேகமாக வெப்பமடைகிறது. இந்தக் காற்று மேல் நோக்கிச் செல்லும்போது, ஏற்கெனவே காற்று இருந்த இடத்தில் காற்றின் அழுத்தம் குறைகிறது. இதனால் காற்றின் அழுத்தம் அதிகமுள்ள பகுதியிலிருந்து குறைவாக உள்ள பகுதியை நோக்கிக் காற்று நகர்கிறது. மேலெழும் வெப்பக் காற்று குளிர்வடைந்து வானில் தாழ்வு நிலையில் தங்குகிறது. இதனால், காற்றின் அழுத்தம் தொடர்ச்சியாக அதிகரிக்கிறது. இதனைக் காற்றழுத்தத் தாழ்வு நிலை என்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து, பூமியின் சுழற்சியால் காற்றும் சுழற்சிக்கு உள்ளாகி வேகம் அதிகரித்துப் புயலாக உருமாறுகிறது. இதனைப் புயல் அல்லது வெப்பமண்டலச் சூறாவளி என்றழைக்கின்றனர்.புயல் அல்லது வெப்பமண்டலச் சூறாவளியானது, இந்திய மற்றும் தென் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் ஆங்கிலத்தில் Cyclones என்றும், அட்லாண்டிக் மற்றும் கிழக்குப் பெருங்கடல் பகுதிகளில் ஆங்கிலத்தில் Hurricane என்றும், பிலிப்பைன்ஸ் மற்றும் மேற்கு வடக்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் ஆங்கிலத்தில் Typhoons என்றும் அழைக்கப்படுகிறது.
நிலநடுக்கோட்டுப் பகுதிகளில், கொரியாலிஸ் விசை குறைவு என்பதால் அங்கு புயல் உருவாகாது. நிலநடுக்கோட்டுப் பகுதியிலிருந்து 5 டிகிரி வடக்கு முதல் 5 டிகிரி தெற்கு (கிட்டத்தட்ட 500 கிலோ மீட்டர் வடக்கு மற்றும் 500 கிலோ மீட்டர் தெற்கு) வரையிலான அட்சங்களிலிருந்தே புயல் உருவாகும். இதே போன்று, 30 டிகிரி வடக்கு முதல் 30 டிகிரி தெற்கு வரை உள்ள பகுதியில் வெப்ப மண்டலப் புயல் உருவாகிறது. கொரியாலிஸ் விசை காரணமாக, வடக்கு அரைக்கோளத்தில் உருவாகும் புயல் கடிகார எதிர்திசையிலும், தெற்கு அரைக்கோளத்தில் உருவாகும் புயல் கடிகார திசையிலும் இருக்கும்.
புயல் பெயருக்கான வரலாறு:
“புயல் அல்லது வெப்பமண்டலச் சூறாவளி என்பது ஒரு வாரம் அல்லது அதற்கு மேல் நீடிக்கக் கூடியதாக இருக்கும். மேலும், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புயல்கள் தோன்றக்கூடும் என்பதால், வானிலை முன்னறிவிப்பாளர்கள் மக்களிடையே குழப்பம் ஏற்படாமலிருப்பதற்காக, ஒவ்வொரு புயலையும் அடையாளப்படுத்தும் நோக்கத்துடன், புயல் உருவாகும் அட்சரேகை, தீர்க்கரேகைகளை, ஒரு புயலின் அடையாளச் சின்னமாக வைத்துக்கொள்ளத் தொடங்கினார்கள். அது புயல் குறித்த எச்சரிக்கையினைப் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்க்க உதவவில்லை.
அதன் பின்னர், புயல்களுக்கு எண்கள், தொழில்நுட்பப் பெயர்கள் போன்றவற்றைப் பயன்படுத்தினர். ஆனால், அது பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. அந்தப் பெயர்களைப் பொதுமக்கள் நினைவில் கொள்வதும் கடினமாக இருந்தது. எனவே, மக்களுக்குப் புயல் குறித்த எச்சரிக்கைச் செய்திகளை வழங்குவதற்கு எளிதாகவும், எச்சரிக்கைச் செய்தியை ஊடகங்கள் வழியாகக் கொண்டு சேர்ப்பதற்கும், மக்களின் பயன்பாட்டிலிருக்கும் பெயரைப் புயலுக்கு வைப்பதே சரியாக இருக்கும்” என்று முடிவுக்கு வந்ததாக பன்னாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது.
தொடக்கக் காலத்தில், புயல்களுக்குக் கத்தோலிக்கப் புனிதர்கள், படகுகளின் பெயர்கள் என்று தன்னிச்சையாகப் பெயரிடப்பட்டன. ஒரு சமயம், அட்லாண்டிக் பெருங்கடலில் ஏற்பட்ட புயலின் போது, அப்புயலால் ஆண்ட்ஜே எனும் ஒரு படகின் கொடிக்கம்பம் இரண்டாகப் பிளந்தெடுக்கப்பட்டது. எனவே, அந்தப் புயலுக்கு அப்படகின் பெயரைக் கொண்டு ஆண்ட்ஜே புயல் என்று பெயரிடப்பட்டது.
உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்த பிரித்தானிய வானிலை ஆய்வாளரான கிளெமென்ட் ராக்கே (Wragge, Clement Lindley, 1852-1922) என்பவர், 1887-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் தங்கிப் பணிபுரிந்த போது, அங்கு வீசிய புயல்களுக்குக் கிரேக்க மற்றும் ரோம புராணப் பாத்திரங்களின் பெயர்களை வைத்தார். ஆஸ்திரேலிய அரசு அவருக்கு இயக்குநர் பதவி வழங்காத நிலையில், அப்போதைய அரசியல்வாதிகளின் மேல் கோபமடைந்த அவர், அவருக்குப் பிடிக்காத ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளான டிரேக், டியாகின் போன்றவர்களின் பெயர்களைப் புயலுக்கு வைத்தார்.
1900-ம் ஆண்டு நடுப்பகுதியில் புயல்களுக்குப் பெண்பால் பெயர்களைப் பயன்படுத்தும் வழக்கம் இருந்தது. வானிலை ஆய்வாளர்கள், சில பெண்பால் பெயர்களை அகரவரிசைப்படுத்தி ஒரு பட்டியல் தயாரித்து, அப்பட்டியலிலிருந்து ஆங்கில எழுத்துக்களில் முதல் எழுத்தான A என்று தொடங்கும் பெயரை முதலாவதாக எடுத்துப் பயன்படுத்தினர். அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு புயலுக்கும் அடுத்தடுத்த பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. 1900 ஆம் ஆண்டின் இறுதியில், தெற்கு அரைக்கோளத்தில் உருவான புயல்களுக்கு ஆண்பால் பெயர்களைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
1953-ம் ஆண்டிலிருந்து அமெரிக்கா, தன் நாட்டில் வீசும் புயல்களுக்கு, கரோல், எட்னா என்று பெண்பால் பெயர்களாக வைக்கத் தொடங்கியது. அதன் பிறகு, 1978-ம் ஆண்டில் ஆண், பெண் சமத்துவம் கருதி டேவிட், பிரடெரிக் என்று ஆண்பால் பெயர்களும் புயலுக்கு வைக்கப்பட்டன என்ற வரலாறும் சொல்லப்படுகிறது.
பொதுவாக, வெப்பமண்டலப் புயல்களுக்குப் பெயரிடுவதென்பது அறிவியல் துறையைச் சார்ந்தவர்கள், பேரழிவுக்கால நிர்வாகத்தை மேற்கொள்வோர், ஊடகத் துறையினர், பொதுமக்கள் ஆகியோருக்கு ஒவ்வொரு சூறாவளியையும் தனித்து அடையாளம் காண்பது; அத்தகைய சூறாவளி எவ்வாறு உருப்பெற்று வருகிறது என்பதைப் பற்றிய புரிதலை உருவாக்குவது, ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே நேரத்தில் உருவாகக் கூடுமானால் அவை குறித்த குழப்பத்தை அகற்றுவது, ஒவ்வொரு வெப்பமண்டல சூறாவளியையும் எளிதாக நினைவில் கொள்வது, மக்களுக்கு விரிவான எச்சரிக்கைகளை விரைவாக வழங்குவதை நோக்கமாகக் கொண்டது என்று குறிப்பிடலாம்.
பன்னாட்டு வானிலை ஆய்வு மையம்:
உலகம் முழுவதும் நிலவும் தட்பவெப்ப நிலைகளைக் கண்காணித்து வரும் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்திருக்கும் பன்னாட்டு வானிலை ஆய்வு மையத்தில் தற்போது 191 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கின்றன. இந்த அமைப்பு, வடக்கு அரைக்கோளப் பகுதியில்…
1. வடக்கு அட்லாண்டிக் கிழக்கு பசிபிக்
2. மத்திய பசிபிக்
3. மேற்கு பசிபிக்
4. வடக்கு இந்தியப் பெருங்கடல்
என்று நான்கு மண்டலங்களாகவும், தெற்கு அரைக்கோளப் பகுதியில்…
1. தென்மேற்கு இந்தியப் பெருங்கடல்
2. ஆஸ்திரேலிய மண்டலம்
3. தெற்கு பசிபிக்
4. தெற்கு அட்லாண்டிக்
என்று நான்கு மண்டலங்களாகவும் கொண்டு, உலகம் முழுவதையும் எட்டுத் தட்பவெப்ப மண்டலங்களாகப் பிரித்திருக்கிறது.
புயலுக்குப் பெயரிடும் நாடுகள்:
உலக அளவில் வெப்பமண்டலச் சூறாவளிகள் குறித்த அறிவுரைகளை வழங்குவது, அவற்றுக்குப் பெயர் சூட்டுவது போன்ற அதிகாரம் பகுதியளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களுக்கும், பகுதியளவிலான வெப்பமண்டலச் சூறாவளி எச்சரிக்கை மையங்கள் ஐந்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. மண்டல அளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு சிறப்பு வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் இருக்கிறது.
இந்திய வானிலை ஆய்வு மையம்:
2000-ம் ஆண்டு நடைபெற்ற உலக வானிலை அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஓமன், மாலத்தீவு, இலங்கை, தாய்லாந்து மற்றும் மியான்மர் என்று எட்டு நாடுகள், வடக்கு இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைப்பது தொடர்பாகப் பேசி, ஒவ்வொரு நாடும் எட்டுப் பெயர்களைப் பரிந்துரைப்பது என்றும், எட்டு நாடுகளுக்கும் எட்டுப் பெயர்கள் வீதம் மொத்தம் 64 பெயர்களைக் கொண்டு ஒரு பட்டியல் தயார் செய்து, அப்பட்டியலிலிருந்து இம்மண்டலத்தில் ஏற்படும் புயல்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வழியாகப் பெயர்களை வைப்பதென்று முடிவு செய்யப்பட்டு, புயலுக்கான பெயர்கள் வைக்கப்பட்டுவந்தன.
அதன் பின்னர், 2004 ஆம் ஆண்டில் ஈரான், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், ஏமன் என்று மேலும் ஐந்து நாடுகள் இந்த மண்டலத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, 13 நாடுகளும், 13 பெயர்களைப் பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டு மொத்தம் 169 பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. தற்போது, இந்தப் பெயர்ப் பட்டியலிலிருந்து, இம்மண்டலத்தில் ஏற்படும் புயல்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் வழியாக, புயலுக்கான பெயர்கள் வைக்கப்பட்டுவருகின்றன.
புயலுக்கான பெயர் பரிந்துரை:
பன்னாட்டு வானிலை ஆய்வு அமைப்பு மற்றும் சில வானிலை அமைப்புகள் இணைந்து வகுத்த வழிமுறைகளைக் கொண்டு புயலுக்கான பெயர்கள் வைக்கப்படுகின்றன. வடக்கு இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் உருவாகும் புயல்களுக்கும் அந்த வழிமுறைகளே பின்பற்றப்படுகின்றன. மண்டல சிறப்பு வானிலை மையம், புதுதில்லி மற்றும் உலகம் முழுவதுமுள்ள மண்டல சிறப்பு வானிலை மையம் வைத்திருக்கும் பட்டியலில் அப்பெயர் இருக்கக் கூடாது. அரசியல் மற்றும் அரசியல் பிரமுகர்கள், சமய நம்பிக்கைகள், பண்பாடுகள் மற்றும் இனத்தைச் சாராது நடுநிலையாக இருக்க வேண்டும்.
உலகெங்கிலும் உள்ள மக்கள் எவரது உணர்வையும் புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். மிகவும் கொடூரமான பெயர்களாக இருக்கக் கூடாது. பெயர் உச்சரிப்பதற்கு எளிமையானதாக இருக்க வேண்டும். பெயரின் அதிகபட்ச நீளம் ஆங்கில மொழியில் எட்டு எழுத்துகளாக இருக்க வேண்டும்.
பரிந்துரைக்கப்படும் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை தொடர்புடைய நாடுகள் குரல் வழியுடன் வழங்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர்கள், மீண்டும் வைக்கப்படக்கூடாது. பரிந்துரைக்கப்படும் பெயரை நிராகரிக்க 13 நாடுகளின் வானிலை ஆய்வு வல்லுநர் குழுவுக்கு உரிமை உண்டு.
பெயர் சூட்டல் அமல்படுத்தப்படும் முன்பாகக்கூட, அதை மறு ஆய்வுக்கு உட்படுத்த அந்தக் குழுவுக்கு அதிகாரம் உண்டு.
வடக்கு இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் உருவாகும் புயல்களுக்குப் பெயர் வைக்கும் 13 நாடுகளில், இந்தியா வைக்கும் புயலுக்கான 13 பெயர்களுக்கு, நாமும் மேற்காணும் வழிமுறைகளைப் பின்பற்றி இந்திய வானிலை ஆய்வு மையத்திற்குப் பெயர்களைப் பரிந்துரை செய்யலாம்.
பரிந்துரை செய்யும் பெயர்களை, உரிய கடிதம் வழியாக, “Office of Director General of Meteorology, India Meteorological Department, Mausam Bhawan, Lodhi Road, New Delhi – 110003” எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!