அகமதாபாத்: குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங்கிற்கு தூண் போல இருக்கும் சுப்மான் கில்-லை இரண்டாவது ஓவரில் அவுட் ஆக்க கிடைத்த அருமையான சான்சை தீபக் சஹார் தவறவிட்டார். ஆனால் ஜடேஜா வீசிய ஓவரில் சுப்மன் கில்லை மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் தோனி வீழ்த்தினார்.
16-வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் – சென்னை அணிகள் பலப்பரிட்சை நடத்தி வருகின்றன. இந்த இரு அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்றிரவு நடக்கவிருந்த நிலையில், அகமதாபாத்தில் திடீரென பெய்த கனமழை பெய்ததால் ஆட்டம் இன்று இரவுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று போட்டி 7.30 மணிக்கு தொடங்கியது.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. டாஸ் ஜெயித்ததும் பேசிய தோனி, ரசிகர்கள் தான் அதிக கஷ்டங்களை அனுபவித்தார்கள். இன்று அவர்களுக்கு சிறந்த நாளாக இருக்கும். 20 ஓவர்கள் முழுமையாக ஆடப் போவது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற தொடர்களின் இறுதிப்போட்டியில் 20 ஓவர்கள் முழுமையாக ஆடுவதே சரியானதாக இருக்கும்” என்றார்.
சென்னை அணி துவக்கத்தில் பந்து வீச்சில் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஃபீல்டிங்கில் டோட்டலாக சொதப்பியது. இதனால், சுப்மான் கில்-க்கு இரண்டாவது ஓவரிலேயெ கேட்சை தீபக் சஹார் மிஸ் செய்தார். அதன்பிறகு சிக்சரும் பவுண்டரிகளுமாக கில் பறக்க விட்டு அசத்தினார். சகார் மட்டும் இல்லை.. ஜடேஜா கூட ரன் அவுட் மிஸ் செய்தார்.
இதனால் தொடர்ந்து சென்னை அணி ஃபீல்டிங்கில் சொதப்ப இந்த வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்திய குஜராத் அடித்து ஆட ஆரம்பித்தது. அதேவேளையில், தோனி தனது வழக்கமான மின்னல் வேக ஸ்டம்பிங்கால் கில் -லின் அதிரடிக்கு தடை போட்டார். 7 வது ஓவரை ஜடேஜா வீசினார். இதில் கடைசி பந்தில் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்த தோனி கில்லை ஆட்டமிழக்க செய்தார்.
20 பந்துகளில் 39 ரன்கள் அடித்து இருந்த கில் ஆட்டமிழந்ததும் சென்னை ரசிகர்கள் மைதானத்தில் துள்ளிக் குதித்தனர். தீபக் சஹார் கேட் மிஸ் செய்ததால் அவரை திட்டி தீர்த்துக் கொண்டு இருந்த ரசிகர்கள் கில் ஆட்டமிழந்ததால் மகிழ்ச்சி அடைந்தனர்.