அரசை வீட்டுக்கு அனுப்பும் வரை போராட்டங்கள் தொடரும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழகத்தில் தொடரும் பல்வேறு ஊழல் முறைகேடுகள்; கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு; சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்து, கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றன!
நிறைவேற்ற முடியாத பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது விடியா திமுக. கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள்; கள்ளச் சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு; கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சீர்கேடுகளை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும்;
முதலமைச்சரின் குடும்பத்தினர் 30 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் குவித்து, இந்த ஊழல் வருமானத்தை வழக்கமான வருமானத்தில் இணைக்க வழி தெரியாமல் திணறுவதாக, முன்னாள் நிதி அமைச்சர் P.T.R. பழனிவேல் தியாகராஜன் பேசிய உரையாடல் மூலம், அரசாங்கத்தில் நிலவும் ஊழலை ஒப்புக்கொள்வது தெளிவாகி உள்ள நிலையில், தமிழகத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதைக் கண்டித்தும், இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாகப் பதவி விலக வலியுறுத்தியும்;
தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள்; சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள்; கொலை, கொள்ளை, வழிப்பறி, கள்ளச் சாராயம், போதைப் பொருட்கள் புழக்கம் முதலானவைகளை கட்டுப்படுத்தத் தவறிய விடியா திமுக அரசின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, 22.05.2023 அன்று கழகத்தின் சார்பில் நான், தமிழக ஆளுநரிடம் மனு அளித்ததைத் தொடர்ந்தும், அதிமுக சார்பில் இன்று (29.05.2023 – திங்கட் கிழமை), சென்னை மாவட்டங்கள் தவிர, கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
விடியா அரசுக்கு எதிராக கழகம் நடத்திய மாபெரும் போராட்டத்தின் குரல் இன்று தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலித்தது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், பெருந்திரளான அளவில் கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும், பொதுமக்களும் கலந்துகொண்டு, விடியா திமுக அரசுக்கு எதிராக தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்த நிகழ்வு, உண்மையிலேயே இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் எழுச்சியுடன் நடைபெற்றதை உணர்த்துகிறது.
தமிழகத்தில் ஊழல்கள் மற்றும் மக்கள் விரோதச் செயல்கள் இனியும் தொடருமேயானால் விடியா திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை, மக்களுக்கு ஆதரவாக அதிமுக போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.