கொழும்பு,
இலங்கையில் அதிகரித்து வரும் மத அவதுாறு சம்பவங்களை தடுக்க, புதிய சட்டத்தை இயற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில், சமீப காலமாக, மதங்கள் குறித்து சமூக ஊடகங்களில் அவதுாறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது.
சமீபத்தில், நகைச்சுவை கலைஞர் நதாஷா எதிர்சூரியா என்பவர், மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்தார். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, தன் செயலுக்கு அவர் மன்னிப்பு கோரினார். எனினும், நதாஷா எதிர்சூரியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது, கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அதிகரித்து வரும் மத அவதுாறு சம்பவங்களை கட்டுப்படுத்த, புதிய சட்டத்ததை இயற்ற, இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து, இலங்கை மத மற்றும் கலாசார விவகாரங்கள் துறை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கா கூறியதாவது:
மதங்கள் குறித்து அவதுாறு கருத்துகள் தெரிவிப்பதை ஏற்க முடியாது. இதைக் கட்டுப்படுத்த, புதிய சட்டம் இயற்றப்பட உள்ளது. இதற்கான வரைவு மசோதா விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இம்மாத துவக்கத்தில், புத்தர் குறித்து கிறிஸ்துவ பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோ தெரிவித்த கருத்து, சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement