புதுடெல்லி: மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுகிழமைகளில் உரையாற்றி வருகிறார். நேற்று நடந்த 101-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாம் 100-வது மனதின் குரல் நிகழ்ச்சியை நிறைவு செய்து, 2-வது சதத்தை தொடங்கியுள்ளோம். மக்களின் பங்களிப்புதான் இந்நிகழ்ச்சியில் மிகப் பெரிய பலம். 100-வது மனதின் குரல் நிகழ்ச்சி வெளிநாடுகள் பலவற்றில் இருந்தும் மக்கள் கேட்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். நியூசிலாந்தில் இருந்து 100 வயது மூதாட்டி ஒருவர், தனது ஆசீர்வாதத்தை வீடியோ மூலம் அனுப்பியுள்ளார்.
காசி தமிழ்ச் சங்கமம், சவுராஷ்டிரா தமிழ்ச் சங்கமம் பற்றி மனதின் குரல் நிகழ்ச்சியில் நாம் பேசியுள்ளோம். சமீபத்தில் காசி – தெலுங்கு சங்கமம் வாரணாசியில் நடைபெற்றது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வுக்கு வலு சேர்க்க மற்றொரு தனிச்சிறப்பான முயற்சி யுவ சங்கமம் நிகழ்ச்சி. பல மாநிலங்களைச் சேர்ந்த உயர் கல்வி மாணவர்கள் இந்நிகழ்ச்சி மூலம் ஒன்றிணைக்கப்படுகின்றனர். முதல்கட்ட யுவ சங்கமம் நிகழ்ச்சியில், சுமார் 1,200 இளைஞர்கள் நாட்டில் உள்ள 22 மாநிலங்களுக்கு சுற்றுலா சென்றனர். இதில் பங்கேற்ற இளைஞர்கள், வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத நினைவுகளுடன் திரும்பினர்.
சில தினங்களுக்கு முன் நான் ஜப்பான் சென்றிருந்தேன். அங்கு ஹிரோஷிமா அமைதி நினைவிட அருங்காட்சியகத்தை பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. இது உணர்வுபூர்வமான அனுபவம். வரலாற்று நினைவுகளை பேசினால், அது வரும் தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சில நேரங்களில் அருங்காட்சியகங்களில் இருந்து நாம் புதிய பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். சர்வதேச அருங்காட்சியக கண்காட்சி சமீபத்தில் டெல்லியில் நடந்தது. இதில் உலகில் உள்ள 1,200 அருங்காட்சியகங்களின் சிறப்புகளை அறிய முடிந்தது. நம்நாட்டிலும் பல வகை அருங்காட்சியகங்கள் உள்ளன. குருகிராமில் உள்ள மியூசியோ கேமரா அருங்காட்சியகத்தில் 1860-ம் ஆண்டுக்கு பிந்தைய 8,000-க்கும் மேற்பட்ட கேமராக்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகளை மனதில் வைத்து, சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகத்தில், ‘அனைத்தும் சாத்தியம்’ என்ற அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் வஸ்துசங்கிரகலயா அருங்காட்சியகத்தில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.