திருவண்ணாமலை: புனல்காடு கிராமத்தில் குப்பை கிடங்கை அகற்றக் கோரி நடைபயணமாக வந்து ஆட்சியரிடம் மனு கொடுக்க முயன்றவர்களுக்கு அனுமதி மறுத்து காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் திருவண்ணாமலை – வேலூர் சாலை போர்க்களமாக மாறியது.
திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் உள்ள மூலக்குன்று மலையடிவாரத்தில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அனுமதியுடன் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள், விவசாயிகள், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இணைந்து, காஞ்சி சாலையில் கடந்த 13-ம் தேதி போராட்டத்தை தொடங்கினர். இவர்களது போராட்டத்தை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து, புனல்காடு கிராமத்தில் இருந்து திருவணணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மே 29-ம் தேதி மாபெரும் நடைபயணம் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்தனர். இதற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்தது. தடையை மீறி நடைபயணம் மேற்கொள்வோம் என போராட்டக் குழுவினர் திட்டவட்டமாக தெரிவித்தனர். அதன்படி, புனல்காடு கிராமத்தில் இன்று மக்கள் திரண்டனர்.
இதையடுத்து, கூடுதல் எஸ்பி பழனி தலைமையில் புனல்காடு கிராமத்தில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர். நீண்ட தொலைவு நடைபயணம் செய்வதை அனுமதிக்க முடியாது, திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயிலில் இருந்து நடைபயணமாக சென்று ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதிக்கப்படும் என தெரிவித்தனர். காவல்துறையின் வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் தலைமையில் அண்ணா நுழைவு வாயில் அருகே 250-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் திரண்டனர்.
அப்போது மாநிலத் தலைவர் பெ.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன் பேச்சுவார்த்தை நடத்தி, நடைபயணம் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார். இதில் உடன்பாடு எட்டப்படாததால், நடைபயணம் செல்வதற்கு அனுமதிக்க முடியாது, கைதாகி விடுங்கள் என காவல் துறையினர் எச்சரித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள், அண்ணா நுழைவு வாயிலில் இருந்த தடுப்புகளை ஆவேசமாக தள்ளிவிட்டு, ஆட்சியர் அலுவலகம் நோக்கி புறப்பட்டனர். காவல்துறைக்கு எதிராக கண்டன முழக்கமிட்டப்படி குழந்தைகள், சிறுவர்களுடன் பெண்கள் நடைபயணம் சென்றனர். அவர்களை தடுக்க, காவல்துறையினர் முயன்றதால், இரண்டு தரப்புக்கும் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பெ.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் சுற்றி வளைத்தனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், போராட்டத்தை கைவிடுமாறு காவல் துணை கண்காணிப்பாளர் குணசேகரன் நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டவில்லை. இதையடுத்து பெ.சண்முகம் உள்ளிட்டோர், அண்ணா நுழைவு வாயிலில் மறியலில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றவர்களை தடுக்கும் வகையில், வேலூர் நெடுஞ்சாலையில் உள்ள அறிவியல் பூங்கா அருகே காவல்துறையின் வாகனங்கள் குறுக்கே நிறுத்தப்பட்டது. இதையறிந்த கிராம மக்கள், அறிவியல் பூங்கா முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பழனி, மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தியும் பலனில்லை. கயிறு கட்டியும், கைகளை கோர்த்தும் தடுப்பு அரண்களை காவல்துறையினர் ஏற்படுத்தினர். தடைகளை தகர்த்தெறிந்து, ஆட்சியர் அலுவலகம் நோக்கி முன்னேறினர். அவர்களை வலுகட்டாயமாக பிடித்து காவல்துறை வாகனத்தில் ஏற்றுவதில், காவல்துறையினர் தீவிரம் காட்டினர்.
அப்போது ஆக்ரோஷமாக கிராம மக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்தால், தங்களது முயற்சியில் இருந்து காவல்துறையினர் பின்வாங்கினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் வகுத்த திட்டங்கள் அனைத்தையும் போராட்ட குழுவினர் முறியடித்தால், வேறு வழியின்றி ஒதுங்கிக்கொள்ள வேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு ஏற்பட்டது. ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலை அடைய வேண்டும் என்ற கிராம மக்களின் இலக்கும் நிறைவேறியது. ஆட்சியர் அலுவலக முகப்பு பகுதியிலும் பெண்கள் திரண்டனர்.
இந்த நிலையில் ஆட்சியர் பா.முருகேஷை, அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பெ.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பெ.சண்முகம் கூறும்போது, “பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அரசு அதிகாரி என்ற முறையில் திட்டத்தை கொண்டு வருவதில் உள்ள நியாயத்தை விளக்கினார். பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பொது வளங்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பை நாங்கள் எடுத்துரைத்தோம்.
பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவு அடிப்படையில் அடுத்தக்கட்ட போராட்டத்தை தீர்மானிப்போம். அமைதியாக நடைபெற்று முடிய வேண்டிய நடைபயணத்தை, மிகப்பெரிய வன்முளை களமாக மாற்றியதற்கு காவல் துறைதான் பொறுப்பு. அமைதியாக நடந்து வந்து ஆட்சியரிடம் மனுகொடுக்க வந்த எங்களது போராட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறைக்கு கண்டனம்” என்றார். இதையடுத்து அனைவரும் புறப்பட்டு சென்றனர். காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை என 4 மணி நேரம், வேலூர் சாலை போர்களமாக மாறியது.
மாணவிக்கு வலிப்பு: அறிவியல் பூங்கா அருகே தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது, புனல்காடு கிராமத்தில் வசிக்கும் ஏழுமலை மகள் மீனா (20) என்பவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆட்டோ மூலம் அழைத்து செல்லப்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
லத்திகள் தவிர்ப்பு: நடைபயணம் மேற்கொள்வதை தடுக்கும் முயற்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டனர். அவர்களது கைகளில் தடி (லத்தி) இருந்தது. இதனால், அசம்பாவித நிகழ்வு ஏற்பட்டுவிடும் என்ற எச்சரிகை உணர்வு காரணமாக, காவலர்களில் கைகளில் இருந்த தடிகளை (லத்தி) சேகரித்து, வாகனத்தில் வைத்தனர். மேலும் டிரோன் கேமரா மூலமாக அனைத்து நிகழ்வுகளும் படம் பிடிக்கப்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு: நடைபயணம் செய்பவர்கள் முன்னேறி செல்லக்கூடாது என்பதற்காக அண்ணா நுழைவு வாயிலில் தடுப்புகளும், அறிவியல் பூங்கா அருகே காவல்துறையின் வாகனங்கள் நிறுத்தப்பட்டது. இதனால், தடையின்றி சென்றுகொண்டிருந்த வாகன போக்குவரத்து முடக்கப்பட்டது. பயணிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டனர்.