சாலையோரக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர் மீது நடவடிக்கைபோலீஸ் சூப்பிரண்டிடம் வியாபாரி புகார் மனு

ஈரோடு

ஈரோடு அருகே கஸ்பாபேட்டை பாலிமேடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (வயது 36) என்பவர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று காலை ஸ்கூட்டரில் வந்தாா். அப்போது அந்த ஸ்கூட்டரில், “சாலையோரக்கடைகள் அமைக்க அனுமதிக்க வேண்டும், கடை அமைக்கக்கூடாது என்று தகராறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வாகனத்தில் அவர் தொங்கவிட்டு இருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் வாகனங்களில் பதாகைகளை தொங்க விட்டு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் பதாகைகளை அகற்றிவிட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறிஇருந்ததாவது:-

கடந்த 1½ ஆண்டாக ஈரோடு மாநகா் பகுதியில் சாலையோர கடை அமைத்து செல்போன் உதிரி பாகங்களை விற்பனை செய்து வருகிறேன். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நான் கடை அமைத்து இருந்தபோது பவானியை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் ஒருவர் என்னை மிரட்டினார். இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்தேன். இந்தநிலையில் ஈரோடு கணபதி நகர் பகுதியில் சாலையோர கடை அமைத்து இருந்தேன். அப்போது அங்கு வந்த ஈரோடு செல்போன் கடை உரிமையாளர் ஒருவர் கடை அமைக்க விடாமல் தகாத வார்த்தையில் பேசினார். அவர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறிஇருந்தார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.