புதுடெல்லி,
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையம் அருகே உள்ள ஏரோசிட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 10 பேர் அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் போலீஸ்நிலையம் அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், அவர்களை ஏஜெண்டு ஒருவர் கனடா அனுப்பி வைப்பதாகக்கூறி ஏமாற்றி விட்டதாகவும், இருந்தாலும் குடியுரிமை அதிகாரிகளை ஏமாற்றி டெல்லி விமானநிலையத்தில் இருந்து கனடாவுக்கு செல்ல திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.
இதனையடுத்து மோசடி செய்யும் நோக்கில் இருந்ததாகக் கூறி போலீசார் 10 பேரையும் கைதுசெய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் பெயர் விவரம் வருமாறு:- ரினாடு, மதன்ராஜ், நிதர்ஷன், பவித்திரன், விகிகரன், அஜித்குமார், சஞ்சய், கதுகுஷன், கிரிராஜ்(இவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள்), மகேந்திர ராஜா (சென்னையைச்சேர்ந்தவர்). இவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.