மைசூரு, மைசூரு அருகே, பஸ் மீது கார் மோதிய விபத்தில், இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் உட்பட 10 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.
கர்நாடகாவின் மைசூரு மாவட்டத்தில் உள்ள குருபூர் பகுதியில் நேற்று சொகுசு கார் ஒன்று அதிவேகமாக சென்றது. எதிரே சாம்ராஜ் நகரில் இருந்து மைசூரு நோக்கி தனியார் பஸ் ஒன்று வந்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் காரும், பஸ்சும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் கார் உருக்குலைந்தது. பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது.
போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், உருக்குலைந்த காரின் பாகங்களை வெட்டி காரில் இறந்து கிடந்த 10 உடல்களை மீட்டனர்.
படுகாயமடைந்த ஒரு சிறுவன் உட்பட மூன்று பேரை காரில் இருந்து மீட்டு, சாம்ராஜ் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல்:
சங்கனகல் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுநாத், 35, கொட்ரேஷ், 45, இருவரும் தங்கள் மனைவி, குழந்தைகள், உறவினர்கள் என 12 பேருடன் நேற்று முன்தினம் ரயிலில் மைசூருக்கு சுற்றுலா வந்தனர்.
நேற்று காலை, பிளிகிரிரங்கன பெட்டாவுக்கு வாடகை காரில் சுற்றுலா சென்றுவிட்டு, மைசூருக்கு திரும்பிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், டிரைவர் உட்பட 10 பேர் பலியாகியுள்ளனர். மூவர் சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்து, ”இவர்களின் குடும்பங்களுக்கு, தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்,” என, அறிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்