சென்னை: Vijay 68 (விஜய் 68) விஜய்யும், வெங்கட் பிரபுவும் இணையும் படத்தின் கதைக்களம் குறித்த புதிய தகவல் ஒன்று உலாவிவருகிறது.
பீஸ்ட் தோல்வி வாரிசு படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். இதன் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படமானது அக்டோபர் 19ஆம், தேதி ரிலீஸாகிறது. ஜூன் இரண்டாவது வாரத்தில் படத்தின் ஷூட்டிங் முடியும் என கருதப்படுகிறது.
விஜய் 68:
லியோவின் ஷூட்டிங் இன்னும் முடியாத சூழலில் விஜய்யின் 68ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தனது 25ஆவது படமாக தயாரிக்கிறது. வெங்கட் பிரபு இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தெலுங்கு இயக்குநர்தான் விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்குவார் என கூறப்பட்ட சூழலில் வெங்கட் பிரபு கமிட்டாகியிருப்பது தளபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் கஸ்டடி ரிசல்ட் கொஞ்சம் அவர்களுக்கு பீதியையும் கொடுத்திருக்கிறது.
விஜய் சம்பளம் எவ்வளவு:
விஜய் 68 அறிவிப்பு வெளியானவுடன் பெரும்பாலானோர் லியோ படம் பற்றி பேசுவதையே மறந்துவிட்டனர். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்துக்கு விஜய் வாங்கவிருக்கும் சம்பளம் தொடர்பாகத்தான் பலரும் பேசுகிறார்கள். அதன்படி விஜய்க்கு 175 கோடி ரூபாயிலிருந்து சம்பளம் கொடுக்க ஏஜிஎஸ் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.
கதைக்களம் என்ன?:
இதற்கிடையே எப்போது ஜாலியான ஜானரில் படம் இயக்கும் வெங்கட் விஜய்யை வைத்து எந்த மாதிரியான ஜானரில் இயக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது. படம் குறித்த அறிவிப்பு வீடியோவை வைத்து பலரும் பல விஷயங்களை யூகங்களாக கூறினர்.குறிப்பாக இந்தப் படம் அரசியல் கதைக்களத்தை கொண்டது. அதன் காரணமாகத்தான் விஜய் இதில் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டார் என்றெல்லாம் பேசப்பட்டது.
புதிய தகவல்:
ஆனால் இப்போது படத்தின் ஒன்லைன் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, அப்பாவுக்கும், மகனுக்கும் நடக்கும் ஈகோதான் படத்தின் ஒன்லைன் என கூறப்படுகிறது. இருப்பினும் இதுவும் எந்த அளவு உண்மை என தெரியவில்லை. ஆனால் இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள், அய்யய்யோ மீண்டும் மீண்டுமா என ஜாலியாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்
வாரிசு கொடுத்த அடி:
அதற்கு காரணம் வாரிசு படம்தான். விஜய் கடைசியாக நடித்த வாரிசு படமும் தந்தைக்கும், மகனுக்கும் இடையே இருக்கும் ஈகோ, எமோஷனலை அடிப்படையாக வைத்து உருவானதுதான். அப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. எனவே மீண்டும் அதே ஜானரா என கேள்வி எழுப்பிவருகின்றனர். அதேசமயம், வெங்கட் பிரபுவின் திரைகக்தையும், மேக்கிங்கும் வித்தியாசமாக இருக்கும். அதனால் இந்த ஜானரை எடுத்தாலும் அதில் வெங்கட் பிரபு தனது முத்திரையை பதித்து வெற்றிப்படமாக மாற்றுவார் எனவும் நம்பிக்கை தெரிவித்துவருகின்றனர் ரசிகர்கள். ஆனால் மீண்டும் தந்தை – மகன் ஜானரை விஜய் கையில் எடுக்க மாட்டார் என்றே திரைத்துறையினரால் கருதப்படுகிறது.