லக்னோ: டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி உத்தரப் பிரதேசம் வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக மாற்றுவதுதான் எங்கள் இலக்கு என மத்திய பாஜக அரசு தொடர்ந்து கூறி வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தை டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலமாக மாற்றுவதுதான் எங்களது இலக்கு என அம்மாநில அரசு பாஜக அரசு கூறி வருகிறது. இந்நிலையில், அதற்கான தொடர் முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் என எல்லாவற்றிலும் இதன் பிரதிபலிப்பு தெரிந்தது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியிருந்த உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேச மாநிலம் டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை நோக்கி சரியான திசையில்தான் பயணித்துக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “சட்டம் ஒழுங்கு, அடிப்படை கட்டமைப்புகளில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. இது நமது இலக்கை நோக்கிய பயணத்தை வேகப்படுத்தியிருக்கிறது.
மாநிலம் தற்போது தொழிற்புரட்சியை சந்தித்து வருகிறது. முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.35 லட்சம் கோடி அளவுக்கு உத்தரப் பிரதேசத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தனர். இது மாநிலத்தின் பிரமாண்ட வளர்ச்சிக்கான அடித்தளமாகும். பெரும் முதலீடுகள் ஒருபுறம் இருக்கையில், மறுபுறம் சிறிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மாநிலத்தின் வளர்ச்சியில் மிகப்பெரிய பங்காற்றுகின்றன. மேலும், மதம் சார்ந்த சுற்றுலா துறையை அரசு மேம்படுத்தியிருப்பதால் அதன் மூலம் கணிசமான அளவில் வருவாய் வருகிறது.
அதேபோல இந்த அரசு மக்களுடன் கைக்கோர்த்து குற்றங்கள் மற்றும் ஊழல்களை ஒழித்துக்கட்டியிருக்கிறோம். மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த அவர்களுக்கான குடியிருப்புகளை பிரமாண்டமாக கட்டமைத்து வருகிறோம். சர்வதேச அளவில் சீனா மீது உலக நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியை இந்தியா சரியாக பயன்படுத்தி வருகிறது. இதில் உத்தரப் பிரதேச மாநிலம் முன்னணி இடத்தில் இருக்கிறது. தற்போது போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வர சில மாதங்கள் ஆகலாம். எப்படி இருப்பினும் தொழில் செய்வதற்கு ஏற்ற இடமாக இம்மாநிலம் இருக்கும். அதே வேளையில் இதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சியும் புதிய உச்சத்தை எட்டும்” என்று கூறியுள்ளார்.